நிவர் புயல்: சென்னையில் புறநகர் ரெயில் சேவைகள் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து


நிவர் புயல்:  சென்னையில் புறநகர் ரெயில் சேவைகள் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து
x
தினத்தந்தி 24 Nov 2020 12:34 PM GMT (Updated: 24 Nov 2020 12:34 PM GMT)

நிவர் புயல் காரணமாக சென்னையில் புறநகர் ரெயில் சேவைகள் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை,

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் 25ந்தேதி முதல் அனைத்து வகையான ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் சரக்கு ரெயில்களும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன. இந்நிலையில் அக்டோபர் 7ந்தேதியில் இருந்து புறநகர் மின்சார ரெயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்தது.

புறநகர் ரெயில் சேவையில் பணியாற்றும் 100% பணியாளர்களை 1ந்தேதியில் இருந்து சுழற்சி முறையில் இல்லாமல் முழுமையாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.  புறநகர் ரெயில், அரசு ஊழியர்களுக்காக இயக்கப்பட்டது. எனினும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

தொடர்ந்து முதல் அமைச்சர் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையின் பேரில், பொருளாதார மீட்புக்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், தனியார் நிறுவன ஊழியர்களையும் செல்ல இந்த மாத தொடக்கத்தில் அனுமதி அளித்து தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் காரணமாக சென்னையில் புறநகர் ரெயில் சேவைகள் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகின்றன.

நாளை காலை 10 மணி வரை சூழலுக்கு ஏற்ப ரெயில் சேவை இருக்கும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

Next Story