அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்த ஆவணங்களை நீதிபதி கலையரசன் ஆய்வு + "||" + Judge Kalaiyarasan examines documents on complaints against Anna University Vice Chancellor Surappa
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்த ஆவணங்களை நீதிபதி கலையரசன் ஆய்வு
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன், சூரப்பா மீதான புகார்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ய தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமனம் செய்யப்பட்டார். விசாரணைக்கு உதவியாக அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் அலுவலகம் கேட்டு உயர்கல்வித்துறைக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதன்படி, அவருக்கு உதவியாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. அதேபோல், விசாரணைக்கான அலுவலகத்தை பொதுப்பணித்துறை ஒதுக்கீடு செய்து அறிவித்தது.
விசாரணையை நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன், சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்துவது பற்றி கடந்த வாரத்தில் அவருக்கு நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக விசாரணைக்கான ஆயத்த பணிகளையும் தொடங்கினார். இதற்கிடையில் அரசு தரப்பில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக புகார் தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன், சூரப்பா மீதான புகார்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ய தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனையடுத்து புகார்கள் அளித்தவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும், பின்னர் மின்னஞ்சல் மூலம் வரும் புகார்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.