20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது


20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
x
தினத்தந்தி 29 Nov 2020 11:17 PM GMT (Updated: 29 Nov 2020 11:17 PM GMT)

தங்கம் விலை கடந்த 20 நாட்களில் பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது. சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி அன்று ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை கடந்து வரலாற்று சாதனை படைத்தது. இது பெண்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொடுமோ? என்று கருதிய வேளையில், கடந்த ஆகஸ்டு 24-ந் தேதி ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அதன் பின்னர் தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் சற்று சரிவு காணப்படுகிறது. சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.348-ம், பவுனுக்கு ரூ.2,784-ம் விலை குறைந்துள்ளது. அதாவது, கடந்த 9-ந் தேதி அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,922-க்கும், பவுன் ரூ.39,376-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4,574-க்கும், பவுன் ரூ.36,592-க்கும் விற்பனையானது.

தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் கடந்த 20-ந் தேதி வெள்ளி ஒரு கிராம் 66 ரூபாய் 80 காசுக்கும், கிலோ ரூ.66 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. அந்த வகையில் வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் 10 காசும், கிலோவுக்கு ரூ.2,100-ம் விலை குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி வெள்ளி ஒரு கிராம் 64 ரூபாய் 70 காசுக்கும், கிலோ ரூ.64 ஆயிரத்து 700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை பட்டியலில் குறைவு காணப்பட்டாலும் செய்கூலி, சேதாரம் எல்லாம் சேர்த்தால், விலை எகிறி விடுகிறது என்பது பொதுமக்களின் மனகுமுறலாக இருக்கிறது.

Next Story