கொரோனா காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது - மத்தியபிரதேச மந்திரி பாராட்டு


கொரோனா காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது - மத்தியபிரதேச மந்திரி பாராட்டு
x
தினத்தந்தி 6 Dec 2020 8:20 AM IST (Updated: 6 Dec 2020 8:20 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்தியபிரதேச மந்திரி விஷ்வாஸ் சாரங் பாராட்டி உள்ளார்.

சென்னை, 

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுபாட்டு அறை மற்றும் கொரோனா தடுப்பு அறையை மத்தியபிரதேச மருத்துவ கல்வித்துறை மந்திரி விஷ்வாஸ் சாரங் நேற்று பார்வையிட்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வெள்ளகால் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.

பின்னர் மத்தியபிரதேச மந்திரி விஷ்வாஸ் சாரங் கூறியதாவது:-

தமிழக சுகாதாரத்துறை செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள சென்னை வந்துள்ளேன். இந்த வாய்ப்பு அளித்த தமிழக முதல்-அமைச்சர், சுகாதாரத்துறைக்கு எனது நன்றிகள். தமிழக சுகாதாரத்துறை கொரோனா காலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு கட்டுப்பாடு அறையை பார்வையிட்டேன்.

இங்கு வழங்கப்படும் சேவைகள் அனைத்தையும் பார்வையிட்டேன். அனைத்து மாநிலங்களும் தங்களது சிறப்பான செயல்பாடுகள் குறித்து மற்ற மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவே தான் இங்குள்ள சேவைகள் குறித்து பார்வையிட வந்தேன். தமிழக மருத்துவ பல்கலைக்கழகம் மிகவும் சிறப்பாக உள்ளது. தமிழக மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story