புத்தாண்டு கொண்டாட்டம்: திருச்செந்தூர் கடலில் இன்றும் நாளையும் நீராட பக்தர்களுக்குத் தடை


புத்தாண்டு கொண்டாட்டம்: திருச்செந்தூர் கடலில் இன்றும் நாளையும் நீராட பக்தர்களுக்குத் தடை
x
தினத்தந்தி 31 Dec 2020 3:22 AM GMT (Updated: 31 Dec 2020 3:22 AM GMT)

புத்தாண்டையொட்டி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை), திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர்:

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறுகிறது.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 3 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், தொடர்ந்து மற்றகால பூஜைகளும் நடைபெற்றது.

நாளை, ஆங்கில புத்தாண்டு

ெகாரோனா தடுப்பு நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாத யாத்திரையாகவும், பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், மற்றகால பூஜைகளும் தொடர்ந்து நடைபெறும்.

இன்றும், நாளையும் கடலில் நீராட தடை

இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டையொட்டி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) கோவில் கடற்கரைக்கு செல்லவோ, கடலில் புனித நீராடவோ பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எனினும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் வழக்கம்போல் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story