தி.மு.க. எம்.பி.க்கள் தமிழ்நாட்டுக்காக இதுவரை சாதித்தது என்ன? மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் பட்டியலிட்டு தீர்மானம்


தி.மு.க. எம்.பி.க்கள் தமிழ்நாட்டுக்காக இதுவரை சாதித்தது என்ன? மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் பட்டியலிட்டு தீர்மானம்
x
தினத்தந்தி 26 Jan 2021 11:07 PM GMT (Updated: 26 Jan 2021 11:07 PM GMT)

தி.மு.க. எம்.பி.க்கள் தமிழ்நாட்டுக்காக இதுவரை சாதித்தது என்ன? என்பது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் பட்டியலிடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கனிமொழி, தயாநிதி மாறன், எஸ்.ஜெகத்ரட்சகன், திருச்சி சிவா, ஆ.ராசா உள்பட தி.மு.க. எம்.பி.க்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் தமிழ்நாட்டுக்காக இதுவரை சாதித்தது என்ன? என்பது தொடர்பாக பட்டியலிடப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

* புதிய கல்வி கொள்கை மூலம் மும்மொழி திட்டத்தை புகுத்தும் நோக்கில் 3-வது மொழியாக இந்தியை படிக்கவேண்டும் என்ற ‘வரைவு அறிக்கை' வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் ‘மூன்றாவது மொழியாக மாநில மொழிகளில் ஒன்றையே கற்கலாம்' என்று புதிய வரைவு கல்வி கொள்கையை திருத்த வைத்தது தி.மு.க.. விவசாயிகளின் நலனை காவுவாங்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் இரு அவைகளிலும் எதிர்ப்பு தெரிவித்ததோடு சுப்ரீம் கோர்ட்டு மூலம் அந்த சட்டங்களுக்கு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

‘நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டமே நடத்தி அதை இன்றளவும் வலியுறுத்தி வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதற்கு அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று பிரதமரையே நேரில் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறோம்.

ஜி.எஸ்.டி.யில் தமிழகத்துக்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என தி.மு.க. சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். காவிரியில் மேகதாது அணை கட்டக்கூடாது என பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இதில் தமிழகத்தின் கருத்தை ஆராயமல் அனுமதிக்கமாட்டோம் என அறிவிக்க வைத்திருக்கிறோம்.

தமிழகத்தின் உரிமைகளுக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் அயராது போராடி வரும் தி.மு.க. எம்.பி.க்களைப் பார்த்து அதுவும் மத்தியில் ஆளுங்கட்சியாகவே இல்லாமல், ஆளுங்கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் சாதிக்கும் தி.மு.க. எம்.பி.க்களை பார்த்து தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்? என்று கேள்வியெழுப்பும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

* மூன்று வேளாண் திருத்த சட்டங்களையும், புதிய மின்சார திருத்த சட்டத்தையும் திரும்ப பெற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்சி உறுப்பினர்கள் வலிமையாக குரல் கொடுப்பார்கள். இலங்கை கடற்படை மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதலை கண்டிக்கவில்லை. சமீபத்தில் கோட்டைபட்டினம் மீனவர்களை நடுக்கடலில் கொன்ற நிகழ்விற்குகூட பிரதமர் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்குற்ற விசாரணையை இலங்கை அரசு பிசுபிசுக்க வைத்துள்ள நிலையிலும், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இப்பிரச்சினை எழுகின்ற நேரத்தில்கூட மத்திய அரசு இலங்கைக்கு எதிராக கருத்துக்கூறாமல் மவுனம் சாதிக்கிறது. ஆகவே, இப்பிரச்சினையில் உடனே தலையிடுமாறு பிரதமருக்கு கடிதம் எழுத இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிராக மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு செயல்பட்டு தமிழ்மொழிக்கு துரோகம் செய்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு ‘இந்தி பேசும் வடமாநிலங்கள் வாழ்க. தமிழகம் போன்ற தென்மாநிலங்கள் வீழ்க' என்று அனைத்து மாநிலத்திற்கும் பொதுவாக இருக்கும் பிரதமரும், அவர் தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசும் செயல்படுவது கவலையளிக்கிறது.

நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதச்சார்பின்மை, சமூக நீதி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மத்திய பா.ஜ.க.வின் திட்டமிட்ட அத்துமீறல்களில் இருந்து பாதுகாத்திடவும், தமிழகத்தின் உரிமைகளை, தமிழக மக்களின் நலன்களை பாதுகாத்திடவும், தொடர்ந்து பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என்று இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

Next Story