‘7 பேர் விடுதலையில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார்'; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


அமைச்சர் ஜெயக்குமார்
x
அமைச்சர் ஜெயக்குமார்
தினத்தந்தி 29 Jan 2021 8:44 PM GMT (Updated: 29 Jan 2021 8:44 PM GMT)

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

கவர்னர் பன்வாரிலால் புரோகித் உடனான சந்திப்புக்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக, தமிழக அரசு தீர்மானம் இயற்றி, கவர்னருக்கு அனுப்பியது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. தீர்மானம் நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் கவர்னரை சந்திக்கும்போதெல்லாம் அழுத்தம் கொடுத்து, ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வந்தார்.

தொடர்ச்சியாக இன்றும் (நேற்று) முதல்-அமைச்சர், கவர்னரை சந்தித்து 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். மேலும் அரசின் சார்பில் ஒரு கோரிக்கையும் கொடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை, கவனமுடன் பரிசீலித்த கவர்னர் தக்க நடவடிக்கை எடுப்பதாக கருத்து தெரிவித்து இருக்கின்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. இரட்டை வேஷம்

இதைடுத்து ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்டகேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பேரறிவாளன் உள்பட 7 பேரும் ஓரிரு நாளில் விடுதலை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கவர்னரை சந்தித்த உங்களுக்கு 7 பேருடைய விடுதலை தொடர்பாக எந்த அளவில் நம்பிக்கை இருக்கிறது?

பதில்:- தி.மு.க. போல இரட்டை வேஷம் போடுபவர்கள் நாங்கள் அல்ல. தி.மு.க. நேற்று ஒரு வேஷம். இன்றைக்கு ஒரு வேஷம் போடுகிறது. இந்த இனப்படுகொலைக்கே தி.மு.க-காங்கிரஸ் தான் காரணம். அன்றைக்கு இலங்கையில் ஒரு இனமே அழிவதை தி.மு.க. வேடிக்கை பார்த்தது. பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய கோப்பு வந்தபோது, அன்றைக்கு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, நளினியை தவிர வேறு யாரையும் விடுதலை செய்யக்கூடாது என்று தெரிவித்தார். இன்றைக்கு இலங்கையில் இனப்படுகொலை செய்த ராஜபக்சேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, போர் குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்காக மனு கொடுக்கிறார்கள். இது யாரு காதில் பூ சுற்றுகிறார்கள் என்பதை யோசித்து பார்க்கவேண்டும். தமிழர்கள் ஏமாளிகள் அல்ல. கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்டுக்கொண்டு இருப்பவர்களும் கிடையாது. தேர்தல் வருகிறது என்பதால் நடிக்கிறார்கள். நிச்சயமாக இந்த நடிப்பை மக்கள் நம்பமாட்டார்கள்.

நல்ல முடிவு

இனப்படுகொலை நடந்தபோது, வாபஸ் வாங்கி இருந்தால் இந்த பிரச்சினை நிகழ்ந்திருக்காது. 2009-ம் ஆண்டு ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று நாங்கள் சட்டசபையில் வலியுறுத்தினோம். அப்போது ஒரு தீர்மானம் கூட தி.மு.க. அரசு போடவில்லை. ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்ற உடன், ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றவாளியாக அறிவித்து, தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழ் மக்களுக்கு தோள் கொடுத்து உயர்த்துகிற இயக்கம். தொடர்ச்சியாக 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்தி வருகிறோம். இந்த முறை நல்ல முடிவை கவர்னர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story