இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து: வருத்தம் தெரிவித்ததால் மோகன் சி.லாசரஸ் மீதான வழக்குகள் ரத்து


மோகன் சி.லாசரஸ்
x
மோகன் சி.லாசரஸ்
தினத்தந்தி 5 Feb 2021 6:43 PM GMT (Updated: 5 Feb 2021 6:43 PM GMT)

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத போதகர் மோகன் சி.லாசரஸ் வருத்தம் தெரிவித்ததை அடுத்து அவர் மீதான வழக்குகளை ரத்துசெய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வழக்கு பதிவு
சென்னை ஆவடியில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த மதபோதனை கூட்டத்தில் பேசிய கிறிஸ்துவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ், இந்து மத கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, மோகன் சி.லாசரஸ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் அளித்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மோகன் சி.லாசரஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

உள்நோக்கம் இல்லை
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘குறைந்த எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்ற உள் அரங்கு கூட்டத்தில், பொதுமக்கள் கேட்ட கேள்விக்கு மோகன் சி.லாசரஸ் பதில் அளித்துள்ளார். யார் மத உணர்வையும் புண்படுத்துவது அவரது நோக்கம் இல்லை. பொது கூட்டத்தில் அவர் பேசவில்லை. ஒத்த கருத்துடையோர் கூடியிருந்த கூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்குதான் அவர் பதில் அளித்துள்ளார்'' என்று வாதிட்டார்.

வருத்தம் தெரிவித்தார்
இதையடுத்து நீதிபதி, மனுதாரர்தான் தெரிவித்த கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர தயாராக உள்ளாரா? என்று கேள்வி எழுப்பினார். தயாராக இருப்பதாக மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து மோகன் சி.லாசரஸ் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என்றும் கூறியிருந்தார்.இதை ஏற்றுக்கொள்வதாக புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இயேசுவின் கருத்து
பல்வேறு மதங்களும், பன்முக கலாசாரமும் நமது நாட்டின் தனித்துவமாக உள்ளன. எனவே நாட்டின் இந்த பன்முகத் தன்மைக் கொண்ட மதம், கலாசார உரிமைகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதேநேரம் ஒவ்வொரு மதபோதகர்களையும் ஏராளமானவர்கள் பின்தொடர்கின்றனர். அப்படியிருக்கும் போது, மதபோதகர்கள் மிகுந்த கவனத்துடன் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக மற்ற மதங்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது. எந்தவொரு மதத்தையும், கடவுளையும் தவறாக சித்தரித்து கிறிஸ்தவ மதத்தை வளர்க்க வேண்டியது இல்லை என இயேசு நாதரே கூறியிருக்கிறார்.

கண்டனம்
எனவே மதபோதனைகள் மற்ற மதத்தினரை துன்புறுத்தும் வகையில் இருக்கக்கூடாது. மனுதாரர் மோகன் சி.லாசரஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், ‘சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பதிவை பார்த்தேன். இந்துமத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் மாற்று மதத்தினரை குறித்து தெரிவித்த அவரது கருத்தை நீதிபதியாகிய நான் ஆதரிப்பது போல் அவர் பேசியுள்ளார். இது கண்டனத்துக்குரியது. என்ன தைரியம் இருந்தால் இதுபோன்ற கருத்துகளை நீதிபதியை தொடர்புபடுத்தி அவர் பேசியிருப்பார்' என்று கண்டனம் தெரிவித்து பேசினார்.

Next Story