எம்.பி. சீட் வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி கர்நாடக கும்பலுக்கு வலைவீச்சு


எம்.பி. சீட் வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி கர்நாடக கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Feb 2021 9:22 PM GMT (Updated: 9 Feb 2021 9:22 PM GMT)

எம்.பி. சீட் வாங்கி தருவதாக கூறியும், மத்திய அரசு டெண்டர் வாங்கி தருவதாகவும் ஆசைகாட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கும்பலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சென்னை, 

கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த சில மோசடி நபர்கள், எம்.பி. சீட் வாங்கி தருவதாக கூறியும், மத்திய அரசு டெண்டர் வாங்கி தருவதாகவும் ஆசைகாட்டி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு தமிழக கவர்னர் மற்றும் பிரதமர் பெயர்களை தவறாக இந்த மோசடி கும்பல் பயன்படுத்தி வருவதாகவும், அந்த கும்பல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

இந்த மோசடி கும்பலிடம் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ரூ.1½ கோடி இழந்துள்ளார். இது பற்றி வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வலைவீச்சு

இது தொடர்பாக மைசூருவை சேர்ந்த மாதவய்யா (வயது 55) உள்பட சிலரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் கர்நாடகா விரைந்துள்ளனர்.

மாதவய்யா ஏற்கனவே ஒரு மோசடி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டவர் ஆவார். தற்போது ஜாமீனில் உள்ள அவர் மீண்டும் மோசடி லீலைகளை அரங்கேற்றி உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

Next Story