சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட நாளை முதல் விண்ணப்பிக்கலாம் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு


சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட நாளை முதல் விண்ணப்பிக்கலாம் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Feb 2021 3:45 AM GMT (Updated: 16 Feb 2021 2:25 AM GMT)

சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பாக சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்கும் முனைப்பில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

அரசியல் கட்சிகளும் கூட்டணியை இறுதிசெய்து, தொகுதி பங்கீட்டையும் முடித்து, பிரசாரத்தை மேற்கொள்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை இருக்கின்றன.

ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல்?

தி.மு.க. கூட்டணியில் இன்னும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படவில்லை. என்றாலும், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் இன்னும் பிரசாரத்தை தொடங்கவில்லை.

இந்த நிலையில், அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக, ஏப்ரல் மாதம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

தி.மு.க.வில் விண்ணப்பம்

இத்தகைய சூழ்நிலையில், தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் நாளை (புதன்கிழமை) முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட இருக்கிறது.

இதுதொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

24-ந்தேதி கடைசி நாள்

நடைபெறவிருக்கும் தமிழ்நாடு-புதுச்சேரி மாநில சட்டசபை பொதுத்தேர்தலுக்கு தி.மு.க.வின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 17-ந்தேதி (நாளை) புதன்கிழமை முதல் 24-ந்தேதி வரை தலைமைக்கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுகிறேன்.

தமிழ்நாடு-புதுச்சேரி மாநில சட்டசபை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம், பொதுத்தொகுதிக்கு ரூ.25 ஆயிரமும், மகளிருக்கும், தனித் தொகுதிக்கும் ரூ.15 ஆயிரமும் ஆகும்.

வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணி கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்து இருப்பின், அவர்களது விண்ணப்ப கட்டணம் திருப்பித் தரப்படும். விண்ணப்பப்படிவம் தலைமை கழகத்தில் ரூ.1,000 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story