சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்: 24-ந்தேதி முதல் அ.தி.மு.க.வில் விருப்பமனு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு


சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்: 24-ந்தேதி முதல் அ.தி.மு.க.வில் விருப்பமனு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Feb 2021 5:25 AM GMT (Updated: 16 Feb 2021 5:25 AM GMT)

சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில் தொண்டர்களிடம் இருந்து வரும் 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் இருந்து விருப்பமனுக்கள் வாங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

தமிழக சட்டசபையின் பதவி காலம் மே 24-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தமிழகத்துடன் சேர்த்து, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியிலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்க பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க., கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து களம் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க.- தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

கூட்டணி

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தொடருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. பா.ஜ.க., த.மா.கா., ச.ம.க. ஆகிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் தொடருவதாக அறிவித்து விட்டன. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. விரைவில் தொடங்க இருக்கிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு குறித்து மறைமுக பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டது.

விருப்பமனு

இதற்கிடையே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதே போல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அடுத்தக் கட்டமாக வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க. ஈடுபட உள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் எல்லா கட்சிகளுக்கும் முன்னதாக வேட்பாளர் தேர்வை நடத்துவது வழக்கம். தற்போது அதே வழக்கத்தை அ.தி.மு.க. முன்னெடுத்துள்ளது. அந்த வகையில், வரும் 24-ந்தேதி முதல் அ.தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

கட்டணம்

இது தொடர்பாக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற தொண்டர்கள், தலைமைக் கழகத்தில் வருகிற 24-ந்தேதி (புதன்கிழமை) முதல் மார்ச் மாதம் 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப கட்டண தொகையை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்ப படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக்கழகத்தில் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க கட்டணம் ரூ.15 ஆயிரமும், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க கட்டணம் ரூ.5 ஆயிரமும், கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க கட்டணம் ரூ.2 ஆயிரம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

ஆளுமைக்கான தேடல்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் 24-ந்தேதி வருகிறது. அன்றைய தினமே விருப்பமனு வழங்கலையும் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்க இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வை தொடர்ந்து மற்ற கட்சிகளும் விருப்பமனு வழங்கலை தொடங்க இருக்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமையின் மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதாலும், புதிய அரசியல் ஆளுமைக்கான தேடல் என்பதாலும் இந்த சட்டசபை தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story