கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்


கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
x
தினத்தந்தி 24 Feb 2021 3:59 AM GMT (Updated: 24 Feb 2021 3:59 AM GMT)

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், பணிகள் முடிவடைந்த கட்டிடங்களையும் திறந்து வைத்தார். அதன் விவரம் வருமாறு:-

சென்னை,

திக்காகுளம் பகுதியில், ரூ.53 லட்சம் எம்.பி. மேம்பாட்டு நிதியில் அமைந்துள்ள சலவைக்கூடத்தில் புதிதாக தண்ணீர் தொட்டியுடன் கூடிய சலவை மேடை மற்றும் சலவைத் தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் அறைகளுடன் கூடிய நவீன சலவைக்கூடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செம்பியம் லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனது சொந்த முயற்சியால் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு திடல், கூடைப் பந்தாட்ட கூடங்களை திறந்து வைத்தார். ஜம்புலிங்கம் ரோடு அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த 199 மகளிர்களுக்கு தையல் எந்திரம், சான்றிதழ் வழங்கி மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.12.96 லட்சம் மதிப்பீட்டில் ஜெகநாதன் சாலையில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். ஹரிதாஸ் தெரு தாமரைக்குளத்தில் சென்னை மாநகராட்சி மூலதன நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட வண்ண விளக்குகளை எரியவைத்ததுடன், குளத்தையொட்டி நடைபாதை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். ஜெயின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் 6-வது பேட்சாக ‘டேலி' பயிற்சி முடித்த 87 மாணவிகளுக்கு மடிக்கணினி, சான்றிதழ் வழங்கி மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் 2-வது பேட்சாக ‘டேலி' பயிற்சி முடித்த 78 மாணவர்களுக்கு மடிக்கணினி, சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த 733 மாணவ, மாணவியருக்கு பரிசு பொருட்களை வழங்கினார். இதேபோல பல்வேறு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

Next Story