நெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் அர்ப்பணிப்பு: ரூ.12 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள்; கோவையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


நெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் அர்ப்பணிப்பு: ரூ.12 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள்; கோவையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Feb 2021 12:38 AM GMT (Updated: 26 Feb 2021 12:38 AM GMT)

நெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை கோவையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

பிரதமர் கோவை வருகை
தமிழகத்தில் ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், பா.ஜனதா சார்பில் மாபெரும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை கோவை வந்தார்.இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மாலை 3.20 மணிக்கு கோவை வந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலைய வரவேற்பு முடிந்ததும், பிரதமர் மோடி விழா நடைபெற்ற கோவை கொடிசியா அரங்குக்கு சாலை வழியாக குண்டு துளைக்காத கார் மூலம் மாலை 3.51 மணிக்கு வந்தார். அங்கு அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், ரவீந்திரநாத் குமார், பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நாட்டுக்கு அர்ப்பணிப்பு
விழா மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மறைந்த முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்க ளுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் முன்னிலை வகித்தார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றார். விழாவில் மத்திய நிலக்கரி சுரங்க துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டு பேசினார்.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி நெய்வேலியில் தலா 500 மெகா வாட் திறன் கொண்ட 2 புதிய அனல் மின் திட்டம், தென்மாவட்டங் களில் 709 மெகாவாட் சூரிய மின்உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

திட்டங்களை தொடங்கி வைத்தார்
மேலும் திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி, திருகுமரன்நகர், மதுரை மாவட்டம் ராஜாக்கூர், திருச்சி இருங்களூர் ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 4,144 குடியிருப்புகள், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.42 கோடியில் கட்டப்பட்ட பாலம் மற்றும் ரெயில்வே பாலம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டம் கோவை உள்பட 8 சீர்மிகு நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கும் திட்டம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் புதிதாக 5 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம் ஆகிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதில் மொத்தம் ரூ.12 ஆயிரத்து 400 கோடியில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவின்போது பிரதமர் தொடங்கி வைத்த திட்டங்கள், அடிக்கல் நாட்டிய திட்டங்களின் குறும்படங்களும் அங்கு அமைக்கப்பட்ட பெரிய 2 திரைகளில் ஒளிபரப்பப்பட்டன.

தமிழில் பேச்சை தொடங்கிய மோடி
இந்த திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி, ‘வணக்கம்' என்று தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார். அப்போது அவரது ஆங்கில பேச்சு தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. விழா முடிந்த பின்பு, மேடையில் இருந்தபடி அனைவருக்கும் பிரதமர் மோடி கையசைத்து விடைபெற்றார். அப்போது அங்கிருந்தவர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்.

நினைவுப்பரிசு
முன்னதாக பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னாடை அணிவித்து வெள்ளியால் செய்யப்பட்ட பெருமாள் சிலையை பரிசாக வழங்கினார். அதைத்தொடர்ந்து துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார். கொரோனா தொற்று ஏற்படாத வகையில், சமூக இடைவெளி வசதி யோடு இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Next Story