சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு


சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு
x
தினத்தந்தி 26 Feb 2021 4:07 AM GMT (Updated: 26 Feb 2021 4:07 AM GMT)

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு அளித்தார்.

தி.மு.க. வேட்பாளர்கள் விருப்ப மனு

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க.வில் வேட்பாளர்கள் விருப்ப மனு வினியோகம் கடந்த 17-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 9-வது நாளாக விருப்ப மனு வினியோகம் நேற்று நடைபெற்றது.

சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரிலும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் பலரும் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின்

இந்தநிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட நேற்று விருப்ப மனு வழங்கினார். அப்போது இளைஞரணி துணை செயலாளர் வக்கீல் எஸ்.ஜோயல் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர். சைதாப்பேட்டை தொகுதிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது பெயரிலும், தனது பெயரிலும் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. விருப்ப மனு அளித்தார்.இதுவரையில், தி.மு.க.வில் 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.

கருணாநிதி போட்டியிட்ட தொகுதி

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்திருப்பதால், வேட்பாளர்கள் நேர்காணலின்போது அவர் தேர்வு செய்யப்பட்டு, வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்பது உறுதியாகி உள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி கருணாநிதி போட்டியிட்ட தொகுதிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை தேர்வு செய்தது ஏன்? என்று உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘நான் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. பகுதி செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். அதனை ஏற்று நான் விருப்ப மனு கொடுத்துள்ளேன். எனக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து தி.மு.க. தலைவரும், பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள்.’ என்று பதிலளித்தார்.


Next Story