தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை


தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 1 March 2021 3:04 AM GMT (Updated: 1 March 2021 3:04 AM GMT)

தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு இன்று அறிவிக்கப்படுகிறது.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தரப்பில் அக்கட்சி பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசியத்தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையிலான நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தை நிறைவில் கே.எம்.காதர் மொய்தீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்தது. தொகுதிகள் குறித்து நாங்கள் எதுவும் சொல்லவில்லை. எண்ணிக்கை பற்றி மட்டும்தான் பேசினோம். கடந்த முறை போல 5 தொகுதிகள் தருவீர்களா? அதற்கு குறைவாக தர போகிறீர்களா? என்று கேட்டோம். அதற்கு முடிவு நாளை (இன்று) சொல்வதாக கூறியிருக்கிறார்கள். நாளை (இன்று) நிச்சயம் தொகுதி பங்கீடு முடிவாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது”, என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து தி.மு.க.-மனிதநேய மக்கள் கட்சி இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையிலான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையின் நிறைவில் ஜவாஹிருலா நிருபர்களிடம், “கடந்த முறை போலவே 5 தொகுதிகளை கேட்டிருக்கிறோம். நாளை (இன்று) மு.க.ஸ்டாலின் முடிவை அறிவிப்பார். எத்தனை தொகுதிகள் என்பதின் அடிப்படையில் மட்டுமே இன்று (நேற்று) பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை சுமூகமாகவே நடந்தது'', என்றார்.

இந்தநிலையில் தி.மு.க.வுடன், ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இன்று தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன.

Next Story