சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு


சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 March 2021 9:07 PM GMT (Updated: 14 March 2021 9:07 PM GMT)

சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை, 

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பனை மரங்கள் வளர்க்கப்படும்

* அனைத்து நீர்நிலைகளின் கரைகளிலும், குறிப்பாக குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட நீர் நிலைகளின் கரைகளிலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும், கடலோர மாவட்ட சாலை ஓரங்களிலும் தமிழ்நாட்டின் சின்னமான பனை மரங்கள் வளர்க்கப்படும்.

* சூரிய சக்தியின் மூலம் இயங்கும் மின் மோட்டார் பம்புகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். மேலும் தற்போது வழங்கப்பட்டு வரும் அதற்கான மானியம் உயர்த்தி வழங்கப்படும்.

* கோதுமைக்கு வழங்கி வரும் ஆதார விலைக்கு இணையாக நெல்லுக்கும் உயர்த்தி தரவேண்டும் என்று மைய அரசை வலியுறுத்துவோம்.

நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்

* நெல்லுக்கான உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கு வழங்கி வரும் ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.

* கரும்பு உற்பத்திக்கு ஆகும் செலவை கவனத்தில் கொண்டு, கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, கரும்புக்கு தற்போது வழங்கி வரும் ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.

* வேளாண் அறிஞர் இயற்கை விவசாயி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்படும்.

கால்நடை பூங்கா

* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும்.

* வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை விவசாயிகள் எளிதில் பெற்று பயன்படுத்த வசதியாக முதல்வர்-விவசாயி வங்கி திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் 309 தாலுகாக்களிலும் இந்த வங்கி தொடங்கப்படும்.

* தமிழ்நாட்டில் மேலும் 5 புதிய கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்கப்படும்.

* தென் தமிழ்நாட்டில் உலகத் தரத்திலான கால்நடை பூங்கா ஒன்று அமைக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு

* மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார உதவித் தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.

* “100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம்”, “150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக” விரிவாக்கப்படும்.

* அம்மா பசுமை வீடு திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் மானியம் ரூ.2,43,000-ல் இருந்து ரூ.3,40,000 ஆக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை, மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுப் பொருட்களுடன் உதவித்தொகையும் தொடர்ந்து வழங்கப்படும்.

* இரண்டுமாத கணக்கீட்டிற்கு பதிலாக, மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

சத்துணவு திட்டம் விரிவாக்கம்

* உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் விரிவுப் படுத்தப்படும்.

* தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு என தொடங்கப்பட்ட தனியார் பங்களிப்புடன் கூடிய காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், விரிவுப்படுத்தி செயல்படுத்தப்படும்.

* பால் உற்பத்தியாளர்களின் உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை ரூ.2 உயர்த்தி வழங்கப்படும்.

* அண்மையில் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குக்களுக்கு நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும். இது தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமாக செயல்படுத்தப்படும்.

சாந்தா பெயரில் இலவச சிகிச்சை திட்டம்

* புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு டாக்டர் சாந்தா நினைவு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்படும்.

* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நியாயமான வட்டியில் கடன் வழங்க தனியாக மகளிர் வங்கி உருவாக்கப்பட்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தேவையான அளவு கடனுதவி வழங்கப்படும்.

ஓட்டுநர் உரிமம்

* ஏழை, எளிய நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்டுத்தும் வகையில் அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும். இத்திட்டமானது, அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள கடன்களை சுலபத்தவணையில் திருப்பி செலுத்தும் வகையில், அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். இத்திட்டம் வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

* 18 வயது நிரம்பியோர் அனைவருக்கும் கட்டணமில்லா இரு சக்கர வாகன பயிற்சியுடன் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

* மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை அ.தி.மு.க. தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்.

* பொதுப்பட்டியலில் உள்ள கல்வியினை மீண்டும் மாநில பட்டியலுக்குகொண்டுவர மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

பயணச்சலுகை கட்டணம்

* சிறுபான்மை மக்களின் பெருவாழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக சென்னை காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் கண்ணியமிகு காயிதே மில்லத்தின் பெயரால் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

* இந்து ஆன்மிக பயணம் மேற்கொள்வோருக்கு, கயிலை மலை - மானசரோவர், நேபாள நாட்டின் - முக்திநாத், ஹரித்துவார், ஜம்மு-காத்ரா வைஷ்ணவ தேவி திருக்கோவில் ஆகிய ஆலயங்களுக்கு ஆன்மிக பயணம் சென்று வர பயணச்சலுகை கட்டணம் உயர்த்தி வழங்கப்படும்.

கச்சத்தீவை மீட்போம்

* இஸ்லாமியர்கள் தற்போது ஹஜ் பயணத்திற்கு செல்ல அரசால் வழங்கப்படுகிற மானியம் ரூ.6 கோடியை உயர்த்தி ரூ.10 கோடியாக வழங்கப்படும்.

* ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் 1000 பேருக்கு ரூ.37 ஆயிரம் அரசு வழங்கும் திட்டத்தில் யாத்திரிகர்களுக்கு முழு கட்டணத்தையும் அரசே செலுத்தும்.

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் மாதாந்திர ஊதியமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.

* முந்தைய தி.மு.க. ஆட்சியில் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்க ஜெயலலிதாவால் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தொடர் சட்டப்போராட்டம் நடத்தி கச்சத்தீவை மீட்போம்.

நிவாரண தொகை உயர்வு

* மீன்பிடி தடை கால நிவாரணமாக மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* விபத்தில் இறந்த மீனவர்களுக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரிய நிதியில் இருந்து வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

* கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு, அவர்கள் பெற்ற கடன் தொகையில் ரூ.1 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

ரூ.5 ஆயிரம் மழைக்கால நிவாரணம்

* விசைத்தறிகளுக்கு விலையில்லா மின்சாரம் 750 யூனிட்டுக்கு பதிலாக 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.

* கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

* கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்.

* படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கான வாழ்வாதார ஊக்கத்தொகை இரட்டிப்பாக உயர்த்தி வழங்கப்படும்.

பெண்களுக்கு 40 சதவீதம் ஒதுக்கீடு

* அரசு வேலைகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உப்பள தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணமாக ரூ 5 ஆயிரம் வழங்கப்படும்.

* மதுரை, கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்படும்.

* நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

அனைத்து சாதிகளுக்கும் இடஒதுக்கீடு

* கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை துரிதமாக செயல்படுத்திட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஆனைமலையாறு-நல்லாறு, பாண்டியாறு-புன்னம்புழா அணைக்கட்டு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

* பத்திரிகையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்ப நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்படும். முக்கிய நகரங்களில் குடியிருப்பு மனைகள் வழங்கப்படும். ஓய்வு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.

* சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story