அ.தி.மு.க. பிரமுகரிடம் ரகசிய குறியீடு கொண்ட டோக்கன்கள் பறிமுதல்


அ.தி.மு.க. பிரமுகரிடம் ரகசிய குறியீடு கொண்ட டோக்கன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 March 2021 9:25 PM GMT (Updated: 21 March 2021 9:25 PM GMT)

உத்தமபாளையம் அருகே அ.தி.மு.க. பிரமுகரிடம் ரகசிய குறியீடு கொண்ட டோக்கன்களை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

தேனி், 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் மும்மூர்த்தி (வயது 55). இவர், அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். அவருடைய மனைவி மீனா, ஆனைமலையன்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிக்கிறார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மும்மூர்த்தி நேற்று வெள்ளக்கரடு பகுதியில் பொதுமக்களுக்கு ரகசிய குறியீடு கொண்ட டோக்கன் வினியோகம் செய்தார். இந்த டோக்கனை கொடுத்தால், அ.தி.மு.க. சார்பில் பணம் வினியோகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பறிமுதல்

இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அங்கு விரைந்து சென்று மும்மூர்த்தியிடம் சோதனை செய்தனர். அப்போது அவரிடமிருந்து ரகசிய குறியீடு கொண்ட 95 டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறக்கும் படையினர் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து மும்மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் பதுக்கல்

இதேபோல் சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் பொய்யலூர் ஊராட்சி ஆளவந்தான்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45). இவர் செவரக்கோட்டை ஊராட்சியில் செயலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தவல்லி அ.தி.மு.க. பிரமுகராக உள்ளார்.

இந்தநிலையில் இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படையினர் அவரது வீட்டுக்கு சென்றனர்.

பணம் சிக்கியது

இதற்கிடையே அவரது வீட்டுக்கு வெளியே கத்தை, கத்தையாக பணம் கிடந்தது. அந்த பணத்தை வருமானவரித்துறையினர் எடுத்து எண்ணி பார்த்தனர். மொத்தம் ரூ.70 ஆயிரத்து 600 ரூபாய் இருந்தது. அந்த பணம் குறித்து அவர்கள் 2 பேரிடம் விசாரித்தபோது சரிவர பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து சிவகங்கை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். 

Next Story