பரிசீலனையில் 2,716 மனுக்கள் நிராகரிப்பு: வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது


பரிசீலனையில் 2,716 மனுக்கள் நிராகரிப்பு: வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது
x
தினத்தந்தி 21 March 2021 11:58 PM GMT (Updated: 21 March 2021 11:58 PM GMT)

வேட்புமனுகள் பரிசீலனையில் 2,716 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று (திங்கட்கிழமை) மாலை வெளியாகிறது.

சென்னை,

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி (செவ்வாய்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், எதிர்க்கட்சியான தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் எதிர்த்து நிற்கின்றன.

இதேபோல், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மேலும், சிறிய கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

5 முனைப்போட்டி

மொத்தத்தில், தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. ஆரம்பத்தில் வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்தாலும் அதன்பிறகு சூடுபிடித்தது. இறுதி நாளான 19-ந் தேதி விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

மொத்தத்தில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும், 6,183 ஆண்கள், 1,069 பெண்கள், 3 திருநங்கைகள் என 7,255 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 97 மனுக்களும், குறைவாக வானூர், பவானிசாகர், திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளில் தலா 13 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சென்னையை பொறுத்தவரை, 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 548 ஆண்களும், 87 பெண்களும், ஒரு திருநங்கையும் என மொத்தம் 636 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

2,716 மனுக்கள் நிராகரிப்பு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அதிகபட்சமாக 55 பேரும், மயிலாப்பூர் தொகுதியில் குறைவாக 27 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். தமிழகம் முழுவதும் தாக்கல் செய்யப்பட்டிருந்த 7,255 வேட்புமனுக்கள் மீது நேற்று முன்தினம் பரிசீலனை நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காத மனுக்கள், தேவையான விவரங்களை முறையாக பூர்த்தி செய்யாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அந்த வகையில், மொத்தம் உள்ள 7,255 மனுக்களை பரிசீலனை செய்ததில், 2,716 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4,492 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது ஒரு மனு ஏற்கப்பட்டவுடன் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தானாகவே தள்ளுபடி ஆனது. இதேபோல், மாற்று வேட்பாளரின் மனுவும் தள்ளுபடி ஆனது.

வேட்பாளர் இறுதி பட்டியல்

சொத்து பட்டியல், வழக்குகள் போன்றவற்றில் சந்தேகம் எழுந்த வேட்புமனுக்கள் தனியாக எடுத்துவைக்கப்பட்டு இறுதியாக பரிசீலிக்கப்பட்டன. இந்த பட்டியலில் சில அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுக்களும் இருந்ததால், அவர்களது ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்தனர். நீண்ட நேர பரிசீலனைக்கு பிறகு உரிய விளக்கங்கள் அளித்ததை தொடர்ந்து பெரும்பாலானவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மனுக்கள் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். இன்று மாலை 3 மணி வரை இதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்வார்கள். குறிப்பிட்ட நேரம் முடிந்ததும், இன்று மாலையே வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக, கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கொரோனா அச்சத்திலும் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Next Story