மாநில செய்திகள்

அரியர் தேர்வு ரத்தை ஏற்க இயலாது ; தேர்வை நடத்தப் பரிசீலிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட் + "||" + Order canceling arrear exams cannot be accepted - Chennai High Court

அரியர் தேர்வு ரத்தை ஏற்க இயலாது ; தேர்வை நடத்தப் பரிசீலிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்

அரியர் தேர்வு ரத்தை ஏற்க இயலாது ; தேர்வை நடத்தப் பரிசீலிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்
அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை,

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கு ஐகோர்ட்டில்  தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின் அடிப்படையிலேயே கலை, அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல்கலைக்கழக மானியக்குழு தரப்பு வழக்கறிஞர், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் ஜூலை 7 ஆம் தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட விதிகளின்படி, எளிய நடைமுறையில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தல் வழங்கியதாகவும், தேர்வு நடத்த வேண்டாம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்க இயலாது என்றும், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வில் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

கல்வியின் புனிதத்தில் எந்தவொரு சமரசமும் இல்லாமல், ஏதேனும் ஒரு தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.