கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி: சிறிய மண்பானைகள், கிண்ணங்கள் கண்டெடுப்பு


கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி: சிறிய மண்பானைகள், கிண்ணங்கள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 10 April 2021 2:54 AM GMT (Updated: 10 April 2021 2:54 AM GMT)

மதுரை அருகே உள்ள கீழடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய-மாநில அரசுகளின் தொல்லியல்துறை சார்பில் ஏற்கனவே 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த வருடம் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மாநில தொல்லியல் துறை சார்பில் கீழடி மற்றும் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றன.இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பொருட்களை ஆய்வு செய்யும்போது 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்காலதமிழர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிய வந்துள்ளது. தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. முதலில் கீழடியிலும், பிறகு கொந்தகை, அகரம் பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் ஒரு குழியில் பாசி, மணிகள், சில்லுவட்டுக்கள், பானை ஓடுகள், கொந்தகையில் முதுமக்கள் தாழி, மண் கிண்ணங்கள், அகரத்தில் சேதமான பானை, தானியங்கள் சேகரித்து வைக்கும் தாழி கண்டறியப்பட்டன. இந்தநிலையில் கீழடியில் 2-வது குழி தோண்டப்பட்டு வந்தது. இந்த குழியில் சுமார் 9 அடி ஆழத்தில் தோண்டும்போது சேதமுற்ற நிலையில் சிறிய பானைகள், சிறிய மண் கிண்ணங்கள் மற்றும் பழங்கால வெள்ளை பாசிகள் கிடைத்துள்ளன. மேலும் சேதமடைந்த நிலையில் அதிக மண்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன.

பழங்கால வெள்ளை பாசி கிடைத்ததால் மேலும் சிறிய பொருட்கள் அதிகம் கிடைக்கும் எனவும் தெரியவருகிறது. இதனால் குழிக்குள் அள்ளிய மணலை சல்லடையில் போட்டு பணியாளர்கள் சலித்து  வருகின்றனர்.

Next Story