சென்னை-கன்னியாகுமரி ரெயில் பாதை திட்டத்தை கைவிட கூடாது; ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை-கன்னியாகுமரி ரெயில் பாதை திட்டத்தை கைவிட கூடாது; ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 April 2021 12:51 AM GMT (Updated: 12 April 2021 12:51 AM GMT)

சென்னை- கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை ரெயில் பாதை திட்டத்தை மத்திய அரசு கைவிட கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை-கன்னியாகுமரி

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து தென்கோடி கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரையை ஒட்டிய வகையில் ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது பா.ம.க.வின் கனவு ஆகும். அந்த கனவை நனவாக்கும் வகையில் தான் பா.ம.க.வை சேர்ந்த அ.வேலு ெரயில்வே துறை மந்திரியாக பதவி வகித்தபோது சென்னையில் ருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் வரை 178 கிலோ மீட்டர் தொலைவுக்கு ெரயில்வே பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அத்திட்டத்திற்காக ரூ.523 கோடி நிதி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கடலூர் முதல் காரைக்குடி வரை இப்போதுள்ள பாதையை மேம்படுத்தி பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு 463 கி.மீ. புதிய பாதை அமைக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டன.

சுற்றுலா, ஆன்மிக தலங்கள்

இந்நிலையில், சென்னை முதல் கடலூர் வரையிலான பாதை அமைக்கப்படும் என்றும், காரைக்குடி- கன்னியாகுமரி புதிய பாதையில் லாபம் ஈட்ட இயலாது என்பதால் அந்த திட்டம் கைவிடப்படுவதாகவும் ெரயில்வே மந்திரி பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.

இந்த பாதையில் சுற்றுலா தலங்களும், ஆன்மிக தலங்களும் இருப்பதால் பயணிகள் ஆதரவுக்கு ஒருபோதும் குறைவு இருக்காது. இவற்றுக்கெல்லாம் மேலாக தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான கிழக்கு கடற்கரையில் அதிக எண்ணிக்கையில் துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சரக்குகளை கொண்டு செல்ல ரெயில்கள் தேவை. எந்த வகையில் பார்த்தாலும் இந்த பாதை அவசிய தேவையாகவும், லாபம் தரும் ஒன்றாகவும் இருக்கும். எனவே, காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடும் முடிவை ரெயில்வே துறை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story