‘யுகாதி' பண்டிகையையொட்டி கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து


‘யுகாதி பண்டிகையையொட்டி கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 12 April 2021 10:45 PM GMT (Updated: 12 April 2021 10:45 PM GMT)

‘யுகாதி' பண்டிகையையொட்டி கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வருட பிறப்பான, ‘யுகாதி' பண்டிகையையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்:- தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட, மராத்தி மற்றும் சிந்தி பேசும் மக்களுக்கு யுகாதி, குடிபட்வா மற்றும் சேத்தி சாந்த் பண்டிகையையொட்டி என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளில், வளமான இந்தியாவை உருவாக்குவதற்கு இணைந்து செயல்படுவதற்கும், நம்முடைய உயர்ந்த பாரம்பரியம், கலாசாரம் மற்றும் மரபுகளை மேம்படுத்துவதற்கும் தீர்மானிப்போம்.

கொரோனா பரவல் உள்ள தற்போதைய சூழலை கருத்தில்கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பண்டிகைகளை கொண்டாடவேண்டும். வீட்டில் இருங்கள். பாதுகாப்போடு இருங்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- இந்த யுகாதி திருநாள், வாழ்வில் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் பெற்றுத் தரும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். இந்தியாவின் ஒற்றுமை மேலும் வலுப்பெறவும், பிரிவினை எண்ணங்களை வேரறுத்து தேச வளர்ச்சிக்கு பாடுபட இந்த நாளில் அனைவரும் சபதம் ஏற்கவேண்டுகிறேன். இந்த யுகாதி திருநாளில் சாதி, மத துவேஷம் நீங்கி, விரைவில் தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த மொழி சிறுபான்மையினரை பாதுகாக்கிற நல்லாட்சி அமைய இருக்கிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- தெலுங்கு, கன்னட புத்தாண்டான யுகாதி திருநாளை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்கவேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதிலும், நாட்டையும், மாநிலத்தையும் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் நடைபோடச் செய்வதிலும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கும் பங்கு உண்டு. மொத்தத்தில் தமிழ்நாட்டில் யுகாதித் திருநாள் சகோதரத்துவத்தை வளர்க்கும் திருநாள் ஆகும். இந்த திருநாளை கொண்டாடும் சகோதரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

இதேபோல் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி., சு.திருநாவுக்கரசர் எம்.பி., சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் மாநில தலைவர் ஆ.மணி அரசன் ஆகியோரும் ‘யுகாதி' பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story