தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? தலைமை செயலாளர் அவசர ஆலோசனை


தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? தலைமை செயலாளர் அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 17 April 2021 1:46 AM GMT (Updated: 17 April 2021 1:46 AM GMT)

கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார். இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டி உள்ளது. நேற்று முன்தினம் 7,987 என்றிருந்த தொற்றின் எண்ணிக்கை, நேற்று 8,449 ஆக உயர்ந்தது.

சென்னையில் நேற்று முன்தினம் 2,558 என்றிருந்த தொற்றின் எண்ணிக்கை நேற்று 2,636 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தொற்றின் எண்ணிக்கை, தமிழக அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

எனவே இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசு சார்பில், திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கடற்கரையில் கூடுவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன. கட்டுப்பாடுகளை மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை. எனவே கூடுதலாக கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்பது பற்றி ஆலோசிக்க அரசு முடிவு செய்தது. இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் தடுப்புப்பணிகள் பற்றியும், தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார். நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம், பகல் 12.30 மணிக்கு முடிந்தது.

தொற்று அதிகரிக்கும் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, இரவு ஊரடங்கை அமல்படுத்தலாமா? வார விடுமுறை நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தலாமா? என்பது போன்ற அம்சங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

மேலும், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்கலாமா? என்றும், அதன் பிறகும் தொற்று எண்ணிக்கை குறையாமல் அதிகரிக்கும்பட்சத்தில் அரசு அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாக குறைக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு வருகிறார். எனவே அவர் இதுகுறித்த அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என்று தெரிகிறது.

Next Story