கொரோனா தடுப்புவிதிகளை தீவிரமாக கடைப்பிடித்து வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


கொரோனா தடுப்புவிதிகளை தீவிரமாக கடைப்பிடித்து வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 April 2021 7:52 PM GMT (Updated: 21 April 2021 7:52 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்புவிதிகளை தீவிரமாக கடைப்பிடித்து வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு திருக்கோவில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வருகிற 29-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் குறைந்தபட்சம் 5 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 600 குருக்கள் சிறப்பு யாகம் நடத்த உள்ளனர். தற்போது கொரோனா 2-வது அலை பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே உத்தரபிரதேசத்தில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. எனவே, வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும். தடையும் விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

நேரடி ஒளிபரப்பு

இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ‘கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் அனைத்தும் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். கும்பாபிஷேக நிகழ்வு யூடியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்’ என்று கூறினார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோவில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாகப் பின்பற்றி கும்பாபிஷேகத்தை நடத்தவேண்டும். விதிகள் மீறப்பட்டால் அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும், கும்பாபிஷேக நிகழ்வை கண்காணிக்க கண்காணிப்பாளர் ஒருவரை இந்த ஐகோர்ட்டு நியமிக்கும்’ என்று உத்தரவிட்டார்.

Next Story