இந்தியன்-2 திரைப்பட விவகாரம்: தயாரிப்பாளருக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் தகவல்


இந்தியன்-2 திரைப்பட விவகாரம்: தயாரிப்பாளருக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் தகவல்
x
தினத்தந்தி 28 April 2021 10:49 PM GMT (Updated: 28 April 2021 10:49 PM GMT)

இந்தியன்-2 பட தயாரிப்பு விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலான சமரச பேச்சு தோல்வியடைந்து விட்டதாக சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை, 

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி இந்தியன்-2 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், ஷங்கர் தரப்பு கருத்தை கேட்காமல் தடையை விதிக்க தனி நீதிபதி மறுத்து விட்டதால், சென்னை ஐகோர்ட்டில், லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

தோல்வி

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காண நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், ‘கடந்த சனிக்கிழமை இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது’ என்று கூறினார்.

தள்ளிவைப்பு

மேலும் ‘ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை. தயாரிப்பு நிறுவனம் ஜூன் மாதத்தில் படத்தை முடிக்க வலியுறுத்தியது. எனவே, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், ‘இயக்குனர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது’ என்று கூறி உத்தரவிட்டனர்.

Next Story