3-வது நாளாக பல மாவட்டங்களில் இருந்து படையெடுப்பு: ‘ரெம்டெசிவிர்' மருந்து வாங்க கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் குவிந்த மக்கள்


3-வது நாளாக பல மாவட்டங்களில் இருந்து படையெடுப்பு: ‘ரெம்டெசிவிர் மருந்து வாங்க கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 29 April 2021 1:20 AM GMT (Updated: 29 April 2021 1:20 AM GMT)

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 3-வது நாளாக நேற்றும் ‘ரெம்டெசிவிர்' மருந்து வினியோகம் நடைபெற்றது. இதனை வாங்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து குவிந்தனர்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்காக உதவும் மருந்தான ‘ரெம்டெசிவிர்' மருந்துக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் இந்த மருந்தை வெளியில் வாங்கி வருமாறு பரிந்துரைக்கின்றனர். இதனை காரணம் காட்டி, வெளி சந்தைகளில் ‘ரெம்டெசிவிர்' மருந்து பன்மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தமிழக மருத்துவ பணிகள் கழகம் மூலம் ‘ரெம்டெசிவிர்' மருந்து கொள்முதல் செய்யப்பட்டு, நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில், கடந்த 26-ந் தேதி முதல் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு, ‘ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த மருந்தை வாங்குவதற்கு நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, கடலூர், சேலம், விழுப்புரம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், 3-வது நாளான நேற்றும் ‘ரெம்டெசிவிர்' மருந்து வாங்க அதிகாலை 2 மணி முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்றும், ஏராளமானோர் மருந்து கிடைக்காமல் திரும்பிச் சென்றனர்.

கண்முன்னே உயிர்கள் பலி

மருந்து வாங்கிய அனுபவம் குறித்து பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த அருணா என்பவர் கூறியதாவது:-

பெங்களூரு மல்லேஸ்வரம் அரசு ஆஸ்பத்திரியில் போதுமான சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் கிடைக்காமல் கண்முன்னே பல உயிர்கள் பறிபோனதை பார்த்தேன். அதைத் தொடர்ந்து எனது தந்தை மற்றும் கணவரை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்து உள்ளேன்.

அங்கு ‘ரெம்டெசிவிர்' மருந்துக்காக டாக்டர்கள் பரிந்துரை செய்து இருந்தனர். மருந்து வினியோகிக்கப்பட்ட முதல் நாளில் எனது கணவருக்காக வரிசையில் நின்று மருந்தை வாங்கிச் சென்றேன். தற்போது அவர் கொரோனா தொற்றில் இருந்து சற்று குணம் அடைந்து உள்ளார்.

மருந்தை வாங்குவதற்காக நேற்று (அதாவது நேற்று முன்தினம்) மாலை 3 மணிக்கே வரிசையில் நின்று டோக்கன் பெற்று சென்றேன். இன்று (அதாவது நேற்று) அதிகாலை 5 மணிக்கே வரிசையில் நின்று மருந்தை வாங்கினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட தலைநகரங்களில்...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த சங்கர் என்பவர் கூறியதாவது:-

எனது, சித்திக்காக ‘ரெம்டெசிவிர்' மருந்து வாங்க நேற்று (நேற்று முன்தினம்) வரிசையில் வந்து நின்று மருந்தும் கிடைக்கவில்லை, டோக்கனும் கிடைக்கவில்லை. இன்று (நேற்று) அதிகாலை 5 மணிக்கே வரிசையில் நிற்கிறோம்.

2 கவுண்ட்டர்களில் மட்டுமே மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக பல கவுண்ட்டர்கள் திறப்பதன் மூலம் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். கொரோனா நோயாளி வார்டு அருகிலேயே நிற்க வேண்டிய நிலை உள்ளது.

வரிசையில் நிற்பவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளவில்லை. கிருமிநாசினி தெளிக்கவில்லை. இதனால், வரிசையில் நிற்பவர்களுக்கும் கொரோனா தொற்று பரவும் அவல நிலை உள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ‘ரெம்டெசிவிர்' மருந்து விற்பனைக்கு அரசு ஏற்பாடு செய்து கிடைக்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.500-க்கு டோக்கன் விற்பனை

மடிப்பாக்கத்தை சேர்ந்த பரணிதரன் என்பவர் கூறியதாவது:-

‘ரெம்டெசிவிர்' மருந்து வாங்குவதற்காக உள்ளே கொடுக்கப்படும் டோக்கன்கள் காவலாளிகள் மூலம் வெளியில் கொடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எங்களுடன் வரிசையில் நின்ற ஒருவர் கூட ரூ.500 கொடுத்து டோக்கன் வாங்கி உள்ளார்.

இதுபோக, கொரோனா தடுப்பூசி போடும் மையத்திற்கு செல்வதாக கூறி உள்ளே சென்று, வரிசையில் நிற்காமல் நேரடியாக பலர் மருந்து வாங்கி செல்கின்றனர். இது போன்ற குளறுபடிகளை தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
‘ரெம்டெசிவிர்' மருந்து வினியோகிக்கும் இடம் மாற்றம்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், கொரோனா நோய் சிகிச்சைக்கான மருந்தான ‘ரெம்டெசிவிர்' காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விற்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு வரிசையில் நிற்பவர்களில் 150 பேருக்கு டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டு மறுநாள் மருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றும் இதே போன்று டோக்கன் வழங்கும்போது, வரிசையில் நின்றவர்கள் முண்டியடித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதனால், டோக்கன் வழங்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், மருந்து வழங்குவதிலும், டோக்கன் வழங்குவதிலும் முறைகேடுகள் நடப்பதாக வரிசையில் நின்றவர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். போலீசார் அவர்களை சமசரம் செய்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் விற்பனை செய்யப்பட்டு வந்த 'ரெம்டெசிவிர்' மருந்துகள் இன்று (வியாழக்கிழமை) முதல் ஆஸ்பத்திரி வளாகத்துக்கு எதிரே உள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் வினியோகிக்கப்பட உள்ளது என்றும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மருந்துகள் வினியோகிக்கப்படும் என்றும், டோக்கன்கள் வழங்கப்படமாட்டாது என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், 4 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு மருந்துகள் வினியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Next Story