ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 5 May 2021 9:09 PM GMT (Updated: 5 May 2021 9:09 PM GMT)

கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை, ஆக்சிஜன் இருப்பு, ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்ததை அடுத்து ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது, தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்து பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.

ஆட்சி மாற்றம்

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும், அதிகாரிகள் இருப்பதனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை என்ன, ஆக்சிஜன் இருப்பு எவ்வளவு, ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளரிடம் விவரங்களைப் பெற்று தெரிவிக்க வேண்டும்’ என்று அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எவ்வளவு ரெம்டெசிவிர் மருந்துகள்?

மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ‘தமிழகத்துக்கு ஏப்ரல் 21-ந் தேதி முதல் மே 9-ந் தேதி வரையிலான காலகட்டத்துக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 500 ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது குறித்த விவரங்களைப் பெற்று விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும்’ என்றார்.

கொண்டாட்டம்

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரிப்பதாக கூறினர். பின்னர், ‘பட்டாசு வெடிக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும், தேர்தல் முடிவு வெளியாகும்போது தி.மு.க.வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை வாயிலாக பார்த்தோம்’ என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களை சிறிதுகாலம் தள்ளிவைக்க வேண்டும்’ என்றனர்.

நிறுத்தப்பட்டது

அதற்கு பதிலளித்த மூத்த வக்கீல் பி.வில்சன், ‘சிலர் பட்டாசு வெடித்ததும், போலீஸ்காரர்கள் வரவழைக்கப்பட்டு, கொண்டாட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டன. கொரோனா நேரத்தில் இதுபோன்ற தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் கூடாது என்று தி.மு.க. தலைவர் அறிக்கை வெளியிட்டார்’ என்று கூறினார்.

Next Story