ஸ்டெர்லைட் ஆலையில் கலெக்டர் தலைமையிலான குழு ஆய்வு ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது


ஸ்டெர்லைட் ஆலையில் கலெக்டர் தலைமையிலான குழு ஆய்வு ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 5 May 2021 11:06 PM GMT (Updated: 5 May 2021 11:06 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கலெக்டர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி, 

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 27-ந்தேதி தீர்ப்பு அளித்தது.

தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு சார்பில் கடந்த 29-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிப்பதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையிலான கண்காணிப்புக்குழுவும் அமைத்து அரசு உத்தரவிட்டது.

ஆலையில் ஆய்வு

இந்த நிலையில் நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர், ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் ஆக்சிஜன் உற்பத்தியை விரைவில் தொடங்கும் வகையில் மின்சார இணைப்பு வழங்கவும், குடிநீர் இணைப்பு வழங்கவும் துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கண்காணிப்பு குழுவினர் உத்தரவிட்டனர்.

பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவையான அளவில் மட்டும் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கப்படும். அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டதும், மின்சாரம் மூலம் அனைத்து எந்திரங்களும் இயக்கி பரிசோதனை செய்யப்படும். இன்னும் 7 நாட்களில் ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

மின் இணைப்பு

பின்னர் மாலையில் கண்காணிப்பு குழுவினர் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

Next Story