இன்று முதல் கடைகளுக்கு நேர கட்டுப்பாடு அறிவிப்பு: கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 May 2021 3:25 AM GMT (Updated: 6 May 2021 3:25 AM GMT)

இன்று முதல் கொரோனாவை கட்டுப்படுத்த கடைகளுக்கு நேர கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

சென்னை,

இந்தியா முழுவதும் கொரோனாவில் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை இன்று முதல் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. 

இன்று முதல் மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் மட்டும் அதுவும் மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை இயங்கலாம். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்படும் என்றும் மீன், இறைச்சி கடைகளில் காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து நேற்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெரிய மற்றும் சிறிய நகரங்களில் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம் அலை மோதியது. கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக ஏராளமானோர் ஒரே நேரத்தில் கூடியதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து விடுமோ என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Next Story