கொரோனா பணியில் உயிர் இழந்த போலீசாருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 May 2021 8:38 PM GMT (Updated: 19 May 2021 8:38 PM GMT)

கொரோனா பணியில் உயிர் இழந்த போலீசாருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

கொரோனா பணியில் உயிர் இழந்த போலீசாருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து போலீசார்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கொரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த டாக்டர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு, கொரோனா கால பாதுகாப்புப் பணியில் உயிர்த்தியாகம் செய்த போலீசாரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை நடைமுறைப்படுத்துபவர்கள் போலீசார்தான். தனிமைப்படுத்துதல், மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் மக்களை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்வதால் அவர்கள் கொரோனா தொற்றுக்கு எளிதில் ஆளாகின்றனர்.

தமிழ்நாட்டில் 54 போலீசார் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நோயிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் உயிர்நீத்த அவர்களின் தியாகம் இணையற்றது. அவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து போலீசார்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Next Story