சென்னையில் ஊரடங்கு கண்காணிப்பு அதிகரிக்கப்படும்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவிப்பு


சென்னையில் ஊரடங்கு கண்காணிப்பு அதிகரிக்கப்படும்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 May 2021 12:34 AM GMT (Updated: 30 May 2021 12:34 AM GMT)

சென்னையில் ஊரடங்கு கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைத்தெறியும் நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 153 இடங்களில் போலீசார் சோதனை சாவடி போன்று தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி வெளியே வரும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

கமிஷனர் நேரில் ஆய்வு

இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், போலீசாரின் வாகன தணிக்கை பணியை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.அவர், அமைந்தகரை புல்லா அவென்யூ, அண்ணாநகர் 2-வது அவென்யூ, கொரட்டூர் பாடி மேம்பாலம், அம்பத்தூர் எஸ்டேட் சிக்னல், எம்.கே.பி. நகர் அம்பேத்கர் கல்லூரி சந்திப்பு, வியாசர்பாடி அசோக் பில்லர் சந்திப்பு ஆகிய 6 இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-

கண்காணிப்பு அதிகரிப்பு

முழு ஊரடங்கில் நடமாடும் மளிகை கடைகளுக்கு சில கட்டுப்பாடுகளை கொண்டு வரவுள்ளோம். அத்தியாவசிய தேவைகளால் ஆம்புலன்சுகள், மருந்து வாகனங்கள் என நிறைய வண்டிகள் வருகின்றன. எனவே தேவைகள் அடிப்படையில் அந்தந்த வாகன சோதனை சாவடிகளில் மளிகை வாகனங்கள் பகுதிகள் வாரியாக பிரித்து அனுப்பப்பட உள்ளன. எங்கள் வேண்டுகோள் என்னவென்றால் இந்த பணிகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு, தொழிலாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உரிய அடையாள அட்டை (பாஸ்) வழங்கவேண்டும் என்பதுதான். குறிப்பாக வார்டு வாரியாக இந்த ‘பாஸ்’கள் வழங்கினால் நன்றாக இருக்கும். சென்னையில் போலீசார் அதிகளவு பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள். வரும் நாட்களில் இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அந்தவகையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு-கண்காணிப்பு பணியில் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண்கள் மீதான குற்றங்களில்...

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது?

பதில்:- காவல்துறையை பொறுத்தவகையில் புகார் அளிக்கவேண்டும். இல்லையெனில் எங்கள் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். அந்த அடிப்படையில் தற்போது துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் பாலியல் பிரச்சினை தொடர்பாக பெண்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- மகரிஷி வித்யா மந்திர் பள்ளி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பதில்:- சமூக வலைதளங்களில் நிறைய தகவல்கள் வெளியாகின்றன. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டோர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story