லேசான தொற்றிருந்தால் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்: கொரோனா நோயாளிகளை 3 வகையாக பிரித்து சிகிச்சை அளிக்க முடிவு


லேசான தொற்றிருந்தால் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்: கொரோனா நோயாளிகளை 3 வகையாக பிரித்து சிகிச்சை அளிக்க முடிவு
x
தினத்தந்தி 1 Jun 2021 11:56 PM GMT (Updated: 1 Jun 2021 11:56 PM GMT)

கொரோனா நோயாளிகளை 3 வகையாக பிரித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருத்தப்பட்ட சிகிச்சை முறையை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சைக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஆஸ்பத்திரிகள் தவிர மற்ற கொரோனா சிகிச்சை இடங்களில், சிகிச்சை மேலாண்மை தொடர்பான திருத்தப்பட்ட சிகிச்சை முறைகளை நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. அந்த பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

திருத்தப்பட்ட முறை

கொரோனா தொற்றுடன் அல்லது சந்தேகத்துடன் வரும் நோயாளிக்கு அங்கிருக்கும் சிகிச்சை வசதியை உடனடியாக அளிக்க வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட கூடியவர்களும், ஆரம்ப கட்ட சிகிச்சையை மட்டுமே பெறக்கூடியவர்களும் பயத்தின் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் கடுமையான பாதிப்படைந்துள்ள நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே திருத்தப்பட்ட சிகிச்சை முறைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

3 வகை நோயாளிகள்

அதன்படி, ஆக்சிஜன் அளவு 94-க்கு மேல் உள்ளவர்களை (முதல் நிலை தொற்று நோயாளிகள்) ஆஸ்பத்திரிகளில் சேர்க்க வேண்டாம். அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தலாம். 6 மணி நேரத்திற்கு ஒருமுறை உடல் வெப்ப பரிசோதனையை சுயமாக செய்துகொள்ள வேண்டும்.

சிகப்பு குறியீடுடன் 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல் நீடித்தாலோ, சுவாசத்தில் பிரச்சினை எழுந்தாலோ ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

ஆக்சிஜன் அளவு 90 முதல் 94 வரையுள்ள நோயாளிகளை (2-ம் நிலை) ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா கவனிப்பு மையங்கள், கொரோனா சுகாதார மையங்களில் சேர்க்கலாம். தேவைப்பட்டால் ஆக்சிஜன் அளிக்கலாம்.

ஆக்சிஜன் அளவு 90-க்கும் கீழுள்ள நோயாளிகளை (3-ம் நிலை), சிகிச்சை வசதியுள்ள இடங்களில் சிகிச்சை கொடுத்துவிட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமையக ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆஸ்பத்திரிகளில் மாற்றம் செய்ய வேண்டும்.

சர்க்கரை அளவு கூடினால்...

இந்த 3 நிலை நோயாளிகளுக்குமே வைட்டமின் சி, ஜிங்க், பாராசிட்டமால் மாத்திரைகளை கொடுக்க வேண்டும். ஆக்சிஜன் அளவு 90-க்கும் கீழாக இருக்கும் நோயாளிகளை கொரோனா ஆஸ்பத்திரிகளுக்கு மாற்ற வேண்டும்.

நோயாளியின் சர்க்கரை அளவு 300-க்கு மேலாக இருந்தாலும், சிறுநீரில் கீடோன் காணப்பட்டாலும் மாவட்ட தலைமையக மருத்துவமனைகள் அல்லது பரிந்துரைக்கப்படும் கொரோனா ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பரிசோதனை வேண்டாம்

இந்த நிலையில் மருத்துவக்கல்வி இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனர் இந்திய மருத்துவ சங்கத் தலைவர் ஆகியோருக்கு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குனர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோன நோய் மேலாண்மை தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை வெளியேற்றுவதற்கு (’டிஸ்சார்ஜ்’ செய்வதற்கு) முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில மருத்துவமனைகளில் டிஸ்சார்ஜ்-க்கும் முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே உங்கள் கீழ் வரும் மருத்துவமனைகளுக்கு இதுதொடர்பாக அறிவுரை வழங்கி, நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

டிஸ்சார்ஜ் கொள்கை

நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு தனி கொள்கை முடிவுகள் உள்ளன. மிகவும் லேசான தொற்றுள்ள, அறிகுறியற்ற மற்றும் 3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் வராத நோயாளிகளை அனுமதித்திருந்தால் 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம். அப்போது பரிசோதனை செய்யத் தேவையில்லை. மேலும் 7 நாட்கள் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்துக்கொள்ள வேண்டும்.

அவர்களைவிட சற்று கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்களையும் அதே விதத்தில் கையாளலாம். அவர்களுக்கும் டிஸ்சார்ஜ்-க்கு முன்பு பரிசோதனை செய்ய தேவையில்லை.

கடுமையான தொற்றுக்கு ஆளான நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்து அங்கு அவர்களின் நோயை குணப்படுத்த வேண்டும். நோய் அறிகுறியை பகுத்தாய்ந்து, தொற்றில்லை என்பதை அறிய ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை ஒரு முறை செய்யப்படலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Next Story