சமூகவலை தளங்களில் பரவிய வீடியோ காட்சி: போக்குவரத்து போலீசாரை தரக்குறைவாக திட்டி சண்டை போட்ட பெண் மீது வழக்குப்பதிவு


சமூகவலை தளங்களில் பரவிய வீடியோ காட்சி: போக்குவரத்து போலீசாரை தரக்குறைவாக திட்டி சண்டை போட்ட பெண் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 Jun 2021 9:07 PM GMT (Updated: 6 Jun 2021 9:07 PM GMT)

சென்னையில் போக்குவரத்து போலீசாரை தரக்குறைவாக திட்டி பெண் ஒருவர் சண்டை போடும் காட்சி நேற்று சமூகவலை தளங்களில் பரவியது. அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சென்னை,

சென்னை சேத்துப்பட்டு சிக்னல் அருகே ஊரடங்கையொட்டி தினமும் போக்குவரத்து போலீசாரும், சட்டம்-ஒழுங்கு போலீசாரும் வாகன சோதனை நடத்துவது வழக்கம். நேற்று காலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனை போட்டபோது, பெண் ஒருவர் போக்குவரத்து போலீசாரை சாலை நடுவில் நின்று, கடும் ஆக்ரோஷமாக மரியாதை குறைவாக திட்டி, மிகவும் மோசமாக நடந்து கொண்ட சம்பவம், சமூகவலை தளங்களில் வைரலானது. இந்த வீடியோ தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறியதாவது:-

இளம்பெண் ஒருவர் காரில் வந்தார். அவரது காரை மடக்கி சோதனை போடப்பட்டது. அந்த பெண் மீன் வாங்க செல்வதாக சொன்னார். அது அத்தியாவசியமானது இல்லை என்பதால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உடனே அந்த இளம்பெண் தனது தாயாரை போனில் பேசி வரவழைத்தார்.

தரக்குறைவான பேச்சு

தாயாராக சொகுசு காரில் பெண் ஒருவர் வந்து இறங்கினார். போலீசார் கொடுத்த அபராத ரசீதை அந்த பெண் தூக்கி எறிந்தார். போலீசாரை வாடா, போடா, சட்டையை கழற்றி விடுவேன், சாகடித்து விடுவேன் என்று மிகவும் தரக்குறைவாக திட்டினார். பின்னர் அந்த பெண் தனது மகளை அழைத்துக்கொண்டு அவர்கள் வந்த கார்களில் ஏறி சென்று விட்டனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிதான் சமூகவலைதளங்களில் பரவியது.

உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், சேத்துப்பட்டு போலீசில் இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் புகார் கொடுத்தனர்.

6 சட்டப்பிரிவுகளில் வழக்கு

உதவி போலீஸ் கமிஷனர் ராஜ்மோகன் மேற்பார்வையில், சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பா வழக்குப்பதிவு செய்துள்ளார். கொலை மிரட்டல், தரக்குறைவாக திட்டுதல், போலீசாரை பணி செய்ய விடாமல் த டுத்தல், அரசு உத்தரவை மீறுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த பெண் தன்னை வக்கீல் என்று தெரிவித்துள்ளார். இதனால் பார்கவுன்சிலுக்கும் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் பெயர் போன்ற விவரம் சேகரிக்கப்படுகிறது. அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே போக்குவரத்து போலீசாருடன் தகராறு செய்த பெண்ணின் பெயர் தனுஜா (52) என்றும், அவர் சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

Next Story