கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Jun 2021 8:04 PM GMT (Updated: 7 Jun 2021 8:04 PM GMT)

கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என்றும், புராதன கோவில்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள தொன்மையான கோவில்களை பாதுகாப்பது தொடர்பாக, 2015-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. இந்த வழக்கில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்தது.

அதில், ‘தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 121 கோவில்கள் உள்ளன. இதில் 8 ஆயிரத்து 450 கோவில்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. இவை புராதன கோவில்களாக கருதப்படுகின்றன. 44 ஆயிரம் கோவில்களில் 32 ஆயிரத்து 935 கோவில்கள் நல்ல நிலையில் உள்ளன. 6 ஆயிரத்து 414 கோவில்கள் சிறிய அளவு சீரமைப்புப் பணிகள் செய்யவேண்டிய நிலையில் உள்ளன. 530 கோவில்கள் பாதி சிதிலமடைந்தும், 716 கோவில்கள் முழுமையாக சிதிலமடைந்தும் உள்ளன. பாதி மற்றும் முழுமையாக சிதிலமடைந்த கோவில்களை யுனெஸ்கோ விதிகளின்படி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று கூறப்பட்டிருந்தது.

கோவில் நிலங்களை மீட்க வேண்டும்

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று தீர்ப்பு கூறினார்.

அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோவில்களை அரசு பாதுகாக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் பட்டியலைத் தயாரித்து, அந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காண வேண்டும். கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்.

சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை

கோவில் நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெறவேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும்.

கோவில்களில் உள்ள சிலைகள், நகைகள் போன்றவற்றை முறையாகப் பாதுகாக்க அதற்கான பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.

கோவில்களில் ‘ஸ்டிராங் ரூம்' (பாதுகாப்பு அறை) அமைத்து, சிலைகள் மற்றும் நகைகளைப் பாதுகாக்க நடடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும்.

ஓதுவார்கள், அர்ச்சகர்கள்

ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு கோவிலிலும் உள்ள சிலைகள் மற்றும் கோவிலுக்குச் சொந்தமான நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளங்களில் வெளியிட வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோவிலுக்குச் சொந்தமான நிலங்களுக்கான வாடகையை முறையாக நிர்ணயிக்க வேண்டும்.

அறங்காவலர்கள் நியமனம்

ஒவ்வொரு கோவிலுக்கும் அறங்காவலர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காண வேண்டும்.

கோவில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும். கோவில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.

கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்கு தணிக்கைத்துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

மத்திய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். கோவில்களுக்குச் சொந்தமான நீர்நிலைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில் நிலங்கள், சொத்துகளை திருடியவர்கள், சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த உத்தரவுகளை 3 மாதத்துக்குள் அமல்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story