தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயமானது குறித்து வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயமானது குறித்து வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Jun 2021 6:55 PM GMT (Updated: 8 Jun 2021 6:55 PM GMT)

தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயமானது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்குக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் சுமார் 38 ஆயிரத்து 600 கோவில்கள் உள்ளன. இதில் வெறும் 331 கோவில்களுக்கு மட்டுமே ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் கிடைக்கிறது. மற்ற கோவில்களுக்கு வருமானமே இல்லை. பல கோவில்களில் வருமானம் இல்லாததால் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது.

அதேநேரம் இந்த கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள சொத்துகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து, அவற்றை சட்டசபையில் தாக்கல் செய்யும். இதன்படி 1985-1987-ம் ஆண்டுகளில் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் இந்து கோவில்களுக்கு சொந்தமான 5.25 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளதாக கூறியிருந்தது. ஆனால் 2018-2019-ம் ஆண்டு மற்றும் 2019-2021-ம் ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு 4.78 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது என்று கூறப்பட்டுள்ளது, இதில் 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயமாகியுள்ளது.

விளக்கம் இல்லை

இவ்வாறு மாயமான நிலம் குறித்து அரசு தரப்பில் விளக்கம் எதுவும் இல்லை. எனவே, இந்த 47 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கண்டுபிடித்து மீட்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல, கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவில் உள்ள கணேசர் கோவில், சூலூர் தண்டபாணி கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், திருப்பூர் அவினாசியப்பர் கோவில், ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவில், பூசாரி வேளாள தம்பிரான் கட்டளை ஆகிய கோவில்களுக்குச் சொந்தமான ஏராளமான சொத்துகள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாயில் 50 சதவீதத்தை சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு பயன்படுத்த வேண்டும். சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதில் அளிக்க வேண்டும்

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் கோவில்களுக்குச் சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயமாகிவிட்டதாக மனுதாரர் கூறுகிறார். இது மட்டும் உண்மை என்றால், மிகப்பெரிய அதிர்ச்சியான தகவலாகும். அரசு தரப்பில் ஆஜரான ரிச்சர்ட் வில்சன், ‘ஏற்கனவே தமிழகம் முழுவதும் உள்ள கோவில் சொத்துகளை பாதுகாப்பது, பராமரிப்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் நேற்று முன்தினம் விரிவான தீர்ப்பை பிறப்பித்துள்ளது என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர், அந்த உத்தரவு சுமார் 4.78 லட்சம் ஏக்கர் நிலம் தொடர்பாக மட்டுமே, அதில் மாயமான 47 ஆயிரம் ஏக்கர் நிலம் குறித்து கூறப்படவில்லை என்றார்.

அரசு கொள்கை விளக்க குறிப்பேட்டு ஆவணங்களின் அடிப்படையில், 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயமாகி உள்ளது. எனவே, இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை செயலாளர், பத்திரப்பதிவுத்துறை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்.

தடை இல்லை

மேலும், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு நன்கொடை வழங்கிய ஆவணங்களில், அவை கோவில் சொத்து என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2019-ம் ஆண்டு அன்னூர் சார்பதிவாளருக்கு எழுதிய கடிதத்தில், சம்பந்தப்பட்ட நிலம் கோவிலுக்கு சொந்தமானது கிடையாது, அரசு புறம்போக்கு நிலமும் கிடையாது. எனவே, இந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய எந்த தடையும் இல்லை என்று சூலூர் சார்பதிவாளர் இளங்கோ கடிதம் எழுதியுள்ளார். இவர் எந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை. எனவே, சார்பதிவாளர் இளங்கோவை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். அவர் இதுகுறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற ஜூலை 5-ந்தேதிக்குத் தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story