அ.தி.மு.க. ஆட்சியில் டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, விடுதி கட்டணத்தில் நடந்த முறைகேடு குறித்து நடவடிக்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி


அ.தி.மு.க. ஆட்சியில் டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, விடுதி கட்டணத்தில் நடந்த முறைகேடு குறித்து நடவடிக்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
x
தினத்தந்தி 10 Jun 2021 9:11 PM GMT (Updated: 10 Jun 2021 9:11 PM GMT)

கொரோனா காலத்தில் டாக்டர்கள், நர்சுகளுக்கு வழங்கப்பட்ட உணவு, விடுதி கட்டணத்தில் கடந்த ஆட்சியின்போது முறைகேடு நடந்திருக்கிறது எனவும், தொற்று பாதிப்பு நீங்கியதும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் சிறுதொழில் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருட்களை இணையதளம் வாயிலாக விற்பனை செய்யும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தடுப்பூசிகள் அளவை மத்திய அரசு மக்களிடம் தெரிவிக்கக்கூடாது என கூறியுள்ளது. ஆனால் தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும். தற்போது 1,060 தடுப்பூசிதான் கையிருப்பில் உள்ளது. அதுவும் சென்னையில் தான் உள்ளது. 36 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை.

முறைகேடு

கொரோனா பேரிடர் காலங்களில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்காக வழங்கப்பட்ட உணவு மற்றும் தங்கும் விடுதி கட்டணங்களில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முறைகேடு நடந்திருப்பது ஆய்வு மேற்கொண்டதில் தெரியவந்துள்ளது. உணவகம் வைத்திருக்காதவர்கள் கூட வெளியிடங்களில் உணவை வாங்கி சப்ளை செய்து, முறைகேடாக பணம் பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கொரோனா தொற்று நீங்கியதுக்கு பிறகு அம்பலப்படுத்தப்படுவார்கள். அவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டுசங்கத்தில் ஆய்வு

இதையடுத்து எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திலும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்திலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை அவர் வெளியிட்டார்.

இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குனர் தீபக்ஜாக்ப் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

இதற்கிடையே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

உயர்தர தங்கும் விடுதிகளில் ஏற்பாடு

டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு சாதாரண உணவகங்களில் இருந்து உணவுக்கென்று ரூ.550 முதல் ரூ.600 வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் 21-ந்தேதிக்கு பிறகு உயர்தர சைவ உணவகங்கள் மற்றும் அசைவ உணவகங்களில் இருந்தும் தரம் உயர்ந்த புரத சத்து மிகுந்த சைவ மற்றும் அசைவ உணவுகள் ரூ.450-க்கு சென்னையில் வழங்கப்படுகிறது.

அதுபோல், தமிழகம் முழுவதும் ரூ.350 முதல் ரூ.375 என்று மாவட்டத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நர்சுகள் தங்கும் வசதி கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சாதாரண விடுதியில் தங்குவதற்கு ரூ.900 என விலை இருந்தது. இந்தநிலையில், கடந்த மாதம் 21-ந்தேதிக்கு பிறகு நர்சுகள் உயர்தர தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். ஆனாலும், அதற்குரிய ஒரு நாள் தொகை ரூ.900-த்திலிருந்து ரூ.750-ஆக குறைக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் நடவடிக்கை

இதன் மூலம் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொரோனா பேரிடரில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றிற்கு ஆகும் செலவிலிருந்து, எந்தவித இடையூறும், கையூட்டும் இல்லாமல், பயனாளர்கள் முழுமையான பயனடைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை குறைக்கப்பட்டுள்ளதால், ஒரு நாளைக்கு அரசுக்கு ஏற்படும் செலவீனம் ஏறத்தாழ ரூ.30 லட்சம் வரை தமிழகம் முழுவதும் மிச்சப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story