கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ.க. கோரிக்கை


கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ.க. கோரிக்கை
x
தினத்தந்தி 19 Jun 2021 1:37 AM GMT (Updated: 19 Jun 2021 1:37 AM GMT)

கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, 

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அனைத்து கட்டுமான பொருட்களின் விலையும் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 ஆயிரமாக இருந்த ஒரு யூனிட் ‘எம் சாண்ட்'டின் விலை, ரூ.6 ஆயிரத்துக்கும் அதிகமாக போய்விட்டது. ஒரு யூனிட் ஜல்லி (முக்கால் இஞ்ச்) ரூ.3 ஆயிரத்து 600 ஆக இருந்தது, ரூ.4 ஆயிரத்து 200-க்கும் மேல் சென்றுவிட்டது. கட்டிடங்கள் கட்ட பயன்படும் கம்பி விலை, தி.மு.க. ஆட்சிக்கு முன்பு ஒரு டன் ரூ.18 ஆயிரமாக இருந்தது, ரூ.75 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு ‘லோடு' செங்கல் ரூ.18 ஆயிரமாக இருந்தது, ரூ.24 ஆயிரத்தை கடந்து சென்றுவிட்டது. கட்டுமான பொருட்களின் விலை உயர்வு மட்டுமல்லாமல், அன்றாடம் தாய்மார்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய், சமையல் பொருட்கள், காய்கறிகள் விலையும் அதிகரித்து விட்டது. திடீரென ஏற்பட்டுள்ள இந்த விலைவாசி உயர்வால், அனைத்து தரப்பு மக்களும் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், பல்வேறு பொருட்களின் விலையை திடீரென அதிகமாக உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. ஏற்புடையது அல்ல. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக இதில் தனி கவனம் செலுத்தி, அனைத்து கட்டுமான பொருட்களின் விலையையும் உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல காய்கறி, சமையல் எண்ணெய் மற்றும் இதர பொருட்களின் விலையையும் உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story