விபத்து வழக்கில் ரூ.1½ கோடி கையாடல்: ஆவணங்களை ஆய்வு செய்ய மாவட்ட நீதிபதிகள் நியமனம் ஐகோர்ட்டு உத்தரவு


விபத்து வழக்கில் ரூ.1½ கோடி கையாடல்: ஆவணங்களை ஆய்வு செய்ய மாவட்ட நீதிபதிகள் நியமனம் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 Jun 2021 7:23 PM GMT (Updated: 22 Jun 2021 7:23 PM GMT)

தஞ்சாவூரில் ரூ.1½ கோடி கையாடல் செய்யப்பட்டதை தொடர்ந்து மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் ஆவணங்களை ஆய்வு செய்ய நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கூடுதல் மாவட்ட கோர்ட்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீடாக செலுத்தப்பட்ட ரூ.1½ கோடியை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுசம்பந்தமாக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த ஊழியரை கைது செய்தனர்.

இந்த முறைகேடு குறித்து விசாரிக்க 3 குழுக்களை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த குழுக்கள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தன.

இழப்பீட்டு் தொகை

அதில், ‘மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் ஆவணங்களை முறையாக பராமரிக்காததால் இதுபோல மோசடிகள் நடந்துள்ளன. கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள இழப்பீடு தொகை, நிரந்தர வைப்பீடுகள் எத்தனை என்ற விவரங்கள் இல்லை. வழக்கு எண்கள் குறிப்பிடாமல் இழப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்களும், போக்குவரத்து கழகங்களும் செலுத்துகின்றன. இதனால் சில வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை சென்றடையவில்லை’ என்று கூறியிருந்தது.

நீதிபதிகள் நியமனம்

இதையடுத்து, ஆவணங்களை சரிபார்ப்பது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், அப்துல் குத்தூஸ் ஆகியோர், மாநிலம் முழுவதும் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டுகளின் ஆவணங்களை ஆய்வு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகளை ‘நோடல்' அதிகாரிகளாக நியமித்து உத்தரவிட்டனர்.

தலைமை ‘நோடல்' அதிகாரியாக ஐகோர்ட்டு கூடுதல் பதிவாளர் நீதிபதி சேதுராமனை நியமித்தனர்.

பின்னர், வழக்கின் விசாரணையை ஜூலை 2-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Next Story