அ.தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தியை குறைத்து தனியாரிடம் அதிக விலைக்கு வாங்கப்பட்டது அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு


அ.தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தியை குறைத்து தனியாரிடம் அதிக விலைக்கு வாங்கப்பட்டது அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Jun 2021 10:14 PM GMT (Updated: 23 Jun 2021 10:14 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சியில் அரசின் மின் உற்பத்தியை குறைத்து தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான 2-வது நாள் விவாதத்தில், நிறைவாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்

எடப்பாடி பழனிசாமி:- கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை. இருந்திருந்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்:- சொல்லி நிறைவேற்றும் திட்டங்களும் உண்டு. சொல்லிக்கொண்டே இருக்கும் திட்டங்களும் உண்டு.

(அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது)

எடப்பாடி பழனிசாமி:- நீங்கள் நிறைவேற்றினால், உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு இல்லை. மின்தடை வேறு, மின்வெட்டு என்பது வேறு.

துரைமுருகன்:- மின்தடை, மின்வெட்டு எப்படியோ, பல்பு எரியவில்லை. தப்பித்துக்கொள்வதற்காக எதையாவது சொல்கிறார்.

மின் தடை ஏன்?

அமைச்சர் செந்தில் பாலாஜி:- கடந்த 9 மாதங்களாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. 10 நாட்களில் போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் நடந்து வருகிறது. 10 நாட்களுக்கு பிறகு மின்தடை இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கும். தற்போது, அறிவிக்கப்பட்டுவிட்டுத்தான் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மின்தடை செய்யப்படுகிறது. அதுவும் 2 முதல் 3 மணி நேரம் வரைதான்.

எடப்பாடி பழனிசாமி:- மின் உற்பத்தியை அதிகரித்தால் மின்வெட்டை குறைக்க முடியும்.

அமைச்சர் செந்தில்பாலாஜி:- 2010-2011-ம் ஆண்டு தமிழகத்தில் மின் உற்பத்தி 5,670 மெகாவாட். இதில், அரசின் உற்பத்தி 2,926 மெகாவாட் ஆகும். தற்போது, 7,158 மெகாவாட் மின் நிறுவு திறன் அரசிடம் உள்ளது. 2021-ம் ஆண்டு இதில் 2,406 மெகாவாட் தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நமது உற்பத்தியை குறைத்து தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5.02 என்ற அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்புக்கு 700 மெகாவாட்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்:- இப்போது, தமிழகத்தில் மொத்த மின்சார உற்பத்தி நிறுவு திறன் எவ்வளவு?.

அமைச்சர் செந்தில்பாலாஜி:- மின் நுகர்வோர்களுக்கு தேவையான அளவு மின்சாரம், மத்திய-மாநில அரசுகள், தனியார் உற்பத்தியில் இருந்து வழங்கப்படுகிறது. கொரோனா காலம் என்பதால், இப்போது தொழிற்சாலைகளும் மூடப்பட்டு கிடப்பதால், தமிழகத்தில் உபரியாக உள்ள 700 மெகாவாட் மின்சாரம் பஞ்சாப்புக்கு வழங்கப்படுகிறது.

(இந்த நேரத்தில் முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச வாய்ப்பு கேட்டார். அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் கூறிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து பேசவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை)

நீண்ட கால ஒப்பந்தம்

துரைமுருகன்:- முன்னாள் அமைச்சர் என்ற முறையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை அவர் தவறாக பயன்படுத்தியதால் மீண்டும் வழங்கப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி:- 2006-2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில், தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.9, ரூ.13 என கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இப்போது, நீங்கள் சொல்லும் நிறுவனத்திடம் இருந்து ரூ.8.22-க்கு மின்சாரம் வாங்கப்பட்டது. அதற்கான ஒப்பந்தம் தி.மு.க. ஆட்சியில்தான் போடப்பட்டது.

அமைச்சர் செந்தில்பாலாஜி:- தி.மு.க. ஆட்சியில் போடப்பட்டது குறுகிய கால ஒப்பந்தம். அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்டது 15 ஆண்டுகள், 25 ஆண்டுகள் என நீண்டகால ஒப்பந்தம். அ.தி.மு.க. ஆட்சியில் தனியாரிடம் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க டெண்டர் போடப்பட்டு, 3 ஆயிரம் மெகாவாட்டிற்கு கையெழுத்து போடப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி:- தி.மு.க. ஆட்சியிலும் நீண்டகால ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story