வங்கியில் இருந்து சாவி, பாஸ்வேர்டை எடுத்து ஏ.டி.எம்.மில் ரூ.2 லட்சம் திருடிய துப்புரவு பணியாளர் கைது


வங்கியில் இருந்து சாவி, பாஸ்வேர்டை எடுத்து ஏ.டி.எம்.மில் ரூ.2 லட்சம் திருடிய துப்புரவு பணியாளர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2021 11:43 PM GMT (Updated: 23 Jun 2021 11:43 PM GMT)

திருவாரூரில், வங்கி மேலாளர் அறையில் இருந்த ஏ.டி.எம். சாவி மற்றும் பாஸ்வேர்டை எடுத்து சென்று ரூ.2 லட்சம் திருடிய துப்புரவு பணியாளரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி வாசலில் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது.இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக கடந்த 14-ந் தேதி வங்கி அதிகாரிகள் பணம் எடுத்துச்சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணத்தை சரிபார்த்தபோது அதில் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 700 குறைந்தது தெரியவந்தது. அந்த பணத்தை யாரோ திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது.

இதனால் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்காமல் பணம் திருட்டு போய் உள்ளதால் அந்த பணத்தை யார் திருடிச்சென்று இருப்பார்கள்? என குழப்பம் நிலவியது.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

துப்புரவு பணியாளரை பிடித்து விசாரணை

போலீசார் வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில் கடந்த 12-ந் தேதி வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர் இளையராஜா என்பவர் காலை 8 மணிக்கு வங்கியின் மேலாளர் அறைக்கு சென்று அங்கு இருந்த ஏ.டி.எம். சாவி மற்றும் ஏ.டி.எம். பாஸ்வேர்டு எழுதி வைத்திருந்த பேப்பரை எடுத்து செல்வது தெரிய வந்தது.

இதனால் ஏ.டி.எம்.மில் இருந்து பணத்தை இளையராஜா திருடியிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார், இளையராஜாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏ.டி.எம்.மில் பணம் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

கைது

வங்கியின் மேலாளர் வினோத்குமார் சிங் கடந்த 12-ந் தேதி விடுமுறையில் இருந்துள்ளார். அதனை தெரிந்து கொண்டு அவரின் அறைக்கு சென்று ஏ.டி.எம். சாவியையும், அங்கு பேப்பரில் எழுதி வைத்திருந்த பாஸ்வேர்டையும் எடுத்து சென்று பணத்தை இளையராஜா திருடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இளையராஜாவை கைது செய்ததுடன் திருடிய பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மன்னார்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த திருட்டு சம்பவத்தில் ஏ.டி.எம். பாஸ்வேர்டை பேப்பரில் எழுதி வைத்திருந்துடன், சாவியை பாதுகாப்பு இன்றி வைத்திருந்தது குறித்து வங்கியின் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story