தகுதியுடைய அர்ச்சகர், பணியாளர்களுக்கு விரைவில் பணி நிரந்தர ஆணை: அமைச்சர் சேகர்பாபு


தகுதியுடைய அர்ச்சகர், பணியாளர்களுக்கு விரைவில் பணி நிரந்தர ஆணை: அமைச்சர் சேகர்பாபு
x
தினத்தந்தி 29 Jun 2021 10:59 PM GMT (Updated: 29 Jun 2021 10:59 PM GMT)

தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் தகுதி உடைய அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ததற்கான ஆணையை வழங்குவார் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

மயிலாப்பூர் கோவிலில் ஆய்வு
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்தநிலையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்யப்படுவது மற்றும் அங்கு உள்ள அன்னதான திட்டம் மற்றும் அங்கு தயாரிக்கப்படும் உணவு தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து தருவது? குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.உடன் வேலு எம்.எல்.ஏ., அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் திருமகள், கோவில் இணை-கமிஷனர் காவேரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரூ.520 கோடி நிலம் மீட்பு

பின்னர் அமைச்சர் சேகர்பாபு, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, முதல்-அமைச்சர் அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மயிலாப்பூர் கோவிலில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எதிர்க்கட்சி தலைவர் கடந்த ஆட்சியில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துகளை பறிமுதல் செய்திருப்பதாகவும், 8 ஆயிரத்து 700 இடங்களை ஆக்கிரமிப்பாளர் பிடியில் இருந்து மீட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.அப்படி இருந்தால் சிவகங்கையில் கவுரிவிநாயகர் கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள். அந்த கட்டுமான பணிகளை ஏன் நிறுத்த முற்படவில்லை? அவரது கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்தும் நில ஆக்கிரமிப்புகளை ஏன் தடுக்கவில்லை.அவ்வாறு மீட்டு இருந்தால், அதனுடைய பட்டியலை நாள் வாரியாகவும், தேதி வாரியாகவும் வெளியிட வேண்டும். ஆனால் இந்த ஆட்சியில் கோவில் சொத்துக்களை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும், பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் மீட்கப்படுவதுடன் தவறு செய்யும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி ஆட்சி பொறுப்பு ஏற்று 55 நாட்களில் ரூ.520 கோடி சந்தை மதிப்பு உள்ள 79.05 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி உள்ளோம்.

விரைவில் பணி நிரந்தர ஆணை
கோவில் திருமண மண்டபங்களில் நடத்தப்படும் திருமணங்களை வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோவில் நிலங்களில் வாடகைதாரர்களின் விவரங்கள், 4 கோடி கோவில் ஆவணங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. ஆன்லைனில் பெறப்படும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கோவில்களில் அர்ச்சகர் முதல் பணியாளர்கள் வரை தற்காலிக அடிப்படையில் பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அவர்களுடைய ஆட்சி காலத்தில் 6 ஆண்டுகள் இந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

தற்போது கோவில்களில் தற்காலிக பணியாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரம் சேகரிக்க அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி 1,210 பேர் இருப்பது தெரியவந்து உள்ளது. 5 ஆண்டுகள் முழுமையாக பணி செய்தவர்கள் நூறு அல்லது 200 பேர் கூடுதலாக சேர வாய்ப்பு உள்ளது. தகுதியான பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் முதல்-அமைச்சர் இவர்களுக்கான பணி நிரந்தர ஆணையை வழங்குவார்.அதேபோல் கோவில்களில் 1 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், 40 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் கூறி உள்ளார். அவர்களுடைய பட்டியலையும் வெளியிட்டால் அவர்களில் தகுதி உள்ளவர்கள் பணியாளர்களாக ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story