தமிழகம் முழுவதும் உள்ள கோவில் புறம்போக்கு நில விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


தமிழகம் முழுவதும் உள்ள கோவில் புறம்போக்கு நில விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 July 2021 1:14 AM GMT (Updated: 4 July 2021 1:14 AM GMT)

தமிழகம் முழுவதும் உள்ள கோவில் புறம்போக்கு நில விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சேலம் மாவட்டம் அருள்மிகு கம்பராயபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 3.88 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் ஆஜராகி, ‘கோவில் புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலங்களின் விவரங்கள் குறித்து அறிக்கை அளிக்கும்படி மேட்டூர் வருவாய் கோட்டாட்சியருக்கு கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், இதுவரை அவர் அறிக்கை அளிக்கவில்லை’ என்று கூறினார்.

அதையடுத்து, தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் கோவில் புறம்போக்கு நிலம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்களின் விவரங்களை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை ஜூலை 9-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story