‘நீட் தேர்வின் நன்மையை மக்களிடம் எடுத்து சொல்வோம்’ தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி


‘நீட் தேர்வின் நன்மையை மக்களிடம் எடுத்து சொல்வோம்’ தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 17 July 2021 4:08 AM GMT (Updated: 2021-07-17T09:38:43+05:30)

நீட் தேர்வின் நன்மைகளை கிராமம் தோறும் மக்களிடம் எடுத்து சொல்வோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

சென்னை, 

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரியான உடன், கே.அண்ணாமலை கடந்த 8-ந் தேதி தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவராக, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவால் அறிவிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 14-ந் தேதி கோவையில் இருந்து புறப்பட்ட அண்ணாமலை திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, திண்டிவனம், விழுப்புரம் வழியாக தாம்பரம் வந்தடைந்தார். நேற்று தாம்பரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட அண்ணாமலை, பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை வழியாக வந்து பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை வந்தடைந்தார். வழிநெடுகிலும் அவருக்கு கட்சி தொண்டர்கள் மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கட்சி தலைமை அலுவலகம் வந்தடைந்த அண்ணாமலைக்கு, கட்சி நிர்வாகிகள் பூரண கும்ப வரவேற்பு அளித்தனர். அலுவலகத்திற்கு உள்ளே வந்த அவர், அங்குள்ள பாரத மாதா சிலை மற்றும் தமிழ் தாய் சிலைகளை மலர் தூவி வணங்கினார்.

அதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில துணை தலைவர் எம்.என்.ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அண்ணாமலையை, தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கான இருக்கையில் அமர வைத்தனர். அதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கான ஆணையை கட்சியின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, அண்ணாமலையிடம் வழங்கினார்.

பின்னர், அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

நான், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி டெல்லியில் வைத்து பா.ஜ.க.வில் இணைந்தேன். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சாதாரண கிராமமான தொட்டம் பட்டியில் பிறந்த நான் விவசாயத்தின் மூலம் படித்து, இந்திய போலீஸ் துறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. 9 ஆண்டுகள் பணியாற்றிய பின்பு, பிரதமர் மோடி மீது கொண்ட பற்றினால், தேச பக்தியின் காரணமாக எனது பணியை துறந்து சரியான நேரத்தில் அரசியலுக்குள் வந்தேன்.

கடந்த 10 மாதங்களாக தமிழக பா.ஜ.க.வின் துணை தலைவராக இருந்த எனக்கு இப்போது தலைவர் பதவியை வழங்கி உள்ளார்கள். இதை மகிழ்ச்சியுடன், மிகுந்த ஆனந்தத்துடன், மிகவும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 70 நாட்கள் ஆன பிறகும் ஒரு தேர்தல் வாக்குறுதி கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. நாங்கள் வந்தால், நீட் தேர்வு நடக்காது என்று சொன்னார்கள். நீட் தேர்வுக்கு முன்பு, தமிழகத்தில் ஆண்டுக்கு 19 கிராமப்புற பகுதியை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே டாக்டர் ஆனார்கள். ஆனால், இப்போது நீட் தேர்வு வந்த பிறகு கடந்த ஆண்டு மட்டும் 430 பேர் கிராமத்தில் படித்த மாணவர்கள் டாக்டர் ஆகி உள்ளனர்.

இதுதான், மத்திய அரசு கிராமப்புற மாணவர்களுக்காக செயல்படுகிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு நீட் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. எனவே நீட் தேர்வின் நன்மையை கிராமம் கிராமமாக சென்று மக்களிடம் எடுத்து கூறுவோம்.

இந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இப்போது 96 கோடி டோஸ் தடுப்பூசிகளை வாங்குவதற்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.

தி.மு.க. அரசு, தமிழகத்திற்கு சரியான முறையில் தடுப்பூசி கொடுக்கப்படவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை முன் வைக்கின்றது. மத்திய அரசு முறைப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் விகிதாச்சார அடிப்படையில் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. தற்போது, எல்.முருகன் மத்திய இணை மந்திரியாக இருப்பதால் இந்த ஒதுக்கீட்டு முறையைவிடவும் கூடுதலான தடுப்பூசி பெறுவதற்கு நேரடியாக பிரதமரிடம் தொடர்பு கொண்டு கேட்பார்.

மேகதாது அணை விஷயத்தில், தமிழகத்தின் அனைத்து கட்சி கூட்டத்தில் எங்கள் நிலைப்பாட்டை எடுத்தோமோ அதே நிலைப்பாட்டில் இருக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு படி தமிழகத்திற்கு கிடைக்கும் தண்ணீரில் ஒரு சொட்டு கூட குறையக்கூடாது. மேகதாது அணையை கட்டுவதில் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறோம்.

கொங்கு நாடு என்று தீர்மானம் நிறைவேற்றிய மாவட்ட தலைவர்களிடம் எங்கள் கட்சி விளக்கம் கேட்டு உள்ளது. எனது கடைசி மூச்சு இருக்கும் வரை எனது எண்ணம், சொல், செயல் அனைத்தும் தமிழக மக்களுக்காக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story