பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே தலையாய கடமை போலீஸ் அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்


பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே தலையாய கடமை போலீஸ் அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 18 July 2021 2:16 AM GMT (Updated: 2021-07-18T07:46:23+05:30)

பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே தலையாய கடமை என்றும், பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை களைந்திட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னை, 

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயல்பாடுகள் குறித்தும், துறையின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதிதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் ரகுபதி, ராஜகண்ணப்பன், வி.செந்தில்பாலாஜி, தலைமைச்செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் கிருஷ்ணன், பிரபாகர், போக்குவரத்து கமிஷனர் சந்தோஷ் கே.மிஸ்ரா, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத் துறை கமிஷனர் ஜெயகாந்தன், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் எல்.சுப்ரமணியன், போலீஸ் டி.ஜி.பி.க்கள் செ.சைலேந்திரபாபு, கரன் சின்கா, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறைத் தலைவர் சுனில்குமார் சிங், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி.க்கள் எம்.ரவி, கே.சங்கர், பி.தாமரைக்கண்ணன், குற்றவியல் தொடர்பு இயக்குனர் சித்ராதேவி, தடய அறிவியல் துறை இயக்குனர் சீனிவாசன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது ‘‘காவல்துறை என்பது, குற்றங்களை தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கும் துறையாக செயல்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை களைந்திட கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும்.

காவலர்களுக்கான சலுகைகள், விடுப்புகள், வீட்டுவசதிக்கான வழிமுறைகளை மேம்படுத்திட வேண்டும்’’ என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து தடய அறிவியல் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன் பின்னர் ‘‘பேரிடர் காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் தீயணைப்பு துறைக்கு தேவையான பயிற்சிகளையும், உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்து சேவையாற்றிட வேண்டும். பொதுமக்களுக்கும் தீ தடுப்பு மற்றும் தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்’’, என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சாலை பாதுகாப்பு, அதிக விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை சரிசெய்யும் பணிகளை துரிதப்படுத்துதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது, ‘‘சாலை பாதுகாப்பை வலுப்படுத்திட தகவல் மேலாண்மை மையம் ஏற்படுத்திட வேண்டும். விபத்துகள் நடந்த இடங்களை அறிவியல் பூர்வமாக பகுப்பாய்வு செய்திடவும், அதிக வாகன விபத்துகள் ஏற்படும் இடங்களுக்கு அருகாமையில் உள்ள கடைகள், உணவகங்களில் உள்ள நபர்களுக்கு முதலுதவி செய்யும் முறைகள் குறித்து பயிற்சி அளித்திட வேண்டும். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்’’, என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் வாடகை கட்டிடங்களில் இயங்கும் நீதிமன்றங்களுக்கு வரும் 5 ஆண்டுகளில் சொந்த கட்டிடம் கட்டவும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, சிறைகளின் பாதுகாப்பு, மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள், கிளை சிறைகள், பாஸ்டல் பள்ளிகள், திறந்த வெளிச் சிறைகள் ஆகியவற்றின் இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிறைவாசிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் தோட்ட உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறை அங்காடியின் செயல்பாடுகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story