பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
x
தினத்தந்தி 19 July 2021 6:57 AM GMT (Updated: 19 July 2021 6:57 AM GMT)

பிளஸ்-2 தேர்வில் 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

சென்னை, 

பிளஸ்-2 பொதுத்தேர்வு கொரோனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகளில் தேர்வுத் துறையும், கல்வித்துறையும் ஈடுபட்டன.

மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, இணையதளத்தில் பதிவேற்றமும் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. அதன்படி, இன்று காலை   பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மாணவர்கள் அவர்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்து அவர்களது முடிவுகளை அறியலாம். மாணவர்கள் பள்ளியில் குறிப்பிட்டுள்ள மொபைல்  எண்ணுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 22-ம் தேதி காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிளஸ்-2 தேர்வு முடிவுகளை  வெளியிட்டார். 

தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது;-

பிளஸ் -2 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முதன்முறையாக தசம எண்களில்(decimal) வெளியிடப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கவே இவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது. 100 சதவீதம்  தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 8,16,473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. வகுப்புக்கு வராத 39000 தனித்தேர்வர்களும் தேர்ச்சியடையவில்லை. மாணவர்கள் மதிப்பெண்களில் திருப்தியடையவில்லை என்றால் மீண்டும் தேர்வெழுதிக்கொள்ளலாம்.

551-600 மதிப்பெண்கள் வரை 30,600 மாணவர்கள் எடுத்துள்ளனர். 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு 4,35,973 மாணவிகளும், 3,80,500 மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர். பொதுப்பாடப்பிரிவில் 7,64,593 பேரும், தொழிற் பாடப்பிரிவில் 51,880 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்

22ஆம் தேதி முதல் பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு எழுதலாம். தேர்வுகள் நடத்தப்படாமல் முடிவுகள் வெளியிட்டது மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

* வணிகவியல் பாடப்பிரிவில் 8,909 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்

* தொழிற்கல்வி பாடப்பிரிவில் 136 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர் 

*  அறிவியல் பாடப்பிரிவில் 30,600 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர் 

* கலைப்பிரிவில் 35 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

என கூறினார்.

Next Story