தமிழகத்துக்கு கூடுதலாக 8½ லட்சம் கொரோனா தடுப்பூசி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது


தமிழகத்துக்கு கூடுதலாக 8½ லட்சம் கொரோனா தடுப்பூசி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது
x
தினத்தந்தி 20 July 2021 6:58 PM GMT (Updated: 20 July 2021 6:58 PM GMT)

தமிழகத்துக்கு கூடுதலாக மேலும் 8½ லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நேற்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு 1 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 3 லட்சத்து 42 ஆயிரத்து 800 கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருந்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற நிலை ஏற்பட்டது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

கூடுதலாக 5 லட்சம் தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து தமிழகத்துக்கு கூடுதலாக 5 லட்சம் தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. இதையடுத்து தமிழகத்துக்கு நேற்று கூடுதலாக 5 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியது. இந்த தடுப்பூசி நேற்று விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தது.

சென்னைக்கு வந்த ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு கிடங்கில் வைத்தனர்.

அதே விமானத்தில் மத்திய தொகுப்பிலிருந்து 30 பெட்டிகளில் 3 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரியமேட்டில் மத்திய கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த மருந்துகள் அனைத்தும் மண்டலம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டதாகவும், பின்னர் மண்டல சேமிப்பு கிடங்கில் இருந்து மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story