தமிழகத்தில் 83 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் ரூ.28,500 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்


தமிழகத்தில் 83 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் ரூ.28,500 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்
x
தினத்தந்தி 20 July 2021 10:30 PM GMT (Updated: 20 July 2021 10:30 PM GMT)

தமிழகத்தில் ரூ.28,500 கோடியில் புதிய தொழில் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னை,

தமிழகத்தில் தொழில்துறையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்திற்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், “முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு” என்னும் விழா தொழில்துறை சார்பில் நேற்று நடைபெற்றது.

ரூ.28,500 கோடியில் முதலீடுகள்

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்த விழாவில், 49 நிறுவனங்களை சேர்ந்த நிர்வாக இயக்குநர்கள், பொறுப்பாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மொத்தம் 49 திட்டங்கள் மூலம் ரூ.28,508 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 83,482 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகின்றன.

விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

எதையும் எதிர்கொள்ளும் வல்லமை

தமிழ்நாடு என்பது பண்பாட்டின் முகவரியாக இருந்தது. அத்தகைய தமிழ்நாடு, முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாறவேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலம் என்பது மிகத் துயரமான கொரோனா காலம் ஆகும்.

தமிழ்நாடு அரசின் துணிச்சலான, துரிதமான நடவடிக்கைகளின் காரணமாக கொரோனாவை வென்ற காலமாக இதனை மாற்றினோம். கொரோனா தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து எதையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டதாக இந்த மாநிலத்தை மாற்றி இருக்கிறோம்.

மக்கள் வைத்துள்ள பெருநம்பிக்கை

கொரோனா தாக்கத்தின்போது மருத்துவ நெருக்கடியை மட்டுமல்ல - நிதி நெருக்கடியையும் நாங்கள் எதிர்கொண்டோம். அப்போது அரசின் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என்று நான் கோரிக்கை வைத்தேன். அதனை ஏற்று இந்த 2 மாத காலத்தில் ரூ.489 கோடியே 78 லட்சம் நிதி திரண்டுள்ளது. அரசின் மீது மக்கள் வைத்துள்ள பெருநம்பிக்கையை இது காட்டுகிறது.

தொழிலை வர்த்தகமாக மட்டுமில்லாமல் சேவையாக நினைத்து நீங்கள் தொண்டாற்றி வருவதற்கு நான் பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய எண்ணம் கொண்டவர்களாக தமிழ்நாட்டு தொழில்துறையினர் இருக்கும்போது எனக்கு இன்னும் கூடுதலான நம்பிக்கை பிறக்கிறது. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு நிச்சயம் மாறப்போகிறது.

பொருளாதாரம் புத்துணர்வு

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள் என்று தமிழ்நாடு அரசு அழைப்பதைத்தாண்டி, தமிழ்நாட்டுத் தொழிலதிபர்கள், மற்ற நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவேண்டும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக நான் கேட்டுக்கொள்கிறேன்.

உலகத்தையே அச்சுறுத்திய இந்த கொரோனா காலத்திலும், கணிசமான முதலீடுகளைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது. உலகளவில் உற்பத்தித்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதாரம் புத்துணர்வு பெற்று இயங்க ஆரம்பித்துள்ளது.

தி.மு.க. அரசின் லட்சியம்

தற்போது, தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உயர்த்துவதே எங்களது அரசின் லட்சியம். 2030-ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக தமிழ்நாட்டினை உருவாக்குவதே, எங்கள் அரசின் குறிக்கோள்.

முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க தேவையான அனைத்து அனுமதிகளையும் உடனுக்குடன் பெற்று, தங்களது திட்டத்தினை விரைவாகவும், எளிதாகவும் நிறுவுதற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0-வினை நான் இன்று தொடங்கி வைத்துள்ளேன்.

தற்போதுள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், 24 துறைகளின் 100 சேவைகள் கொண்ட, ஒரு மேம்படுத்தப்பட்ட ஒற்றைச்சாளர இணையதளமாக இது விளங்கும். இணைய முறையில் உங்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். கூடுதலாக 210 சேவைகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். தட்டாமலேயே தமிழ்நாடு அரசின் கதவுகள் திறக்கும் என்ற உறுதியை உங்களுக்கு நான் வழங்குகிறேன்.

பெயரளவிலும், காகித அளவிலும் என்று இல்லாமல், திறம்படச் செயல்படும் ஓர் அமைப்பாக இந்த ஒற்றைச் சாளர இணையதளம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் செயல்பாட்டினை நானே நேரடியாக கண்காணிப்பேன். புதிய முதலீடுகளைப் பெருமளவு ஈர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது முதல் இலக்கு. அதற்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

4-வது தொழில்துறை புரட்சி

தமிழ்நாட்டில் பொது உற்பத்தி, ஆட்டோமொபைல் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, தோல் பொருட்கள் உற்பத்தி ஆகியவை தொடர்ந்து நடந்துவரும் தொழில்களாக இருக்கின்றன. இந்த நிலையில் வளர்ந்து வரும் துறைகளான மின்வாகனங்கள் உற்பத்தி, சூரிய மின்சக்தி கலன்கள் மற்றும் காற்றாலை கலன்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையங்கள், மின்னணு வன்பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தொழில்துறை புரட்சி 4.0 என்று அழைக்கப்படும் 4-வது தொழில்துறை புரட்சி, நம் மாநிலத்திற்கு கிடைத்துள்ள ஓர் அரிய வாய்ப்பாகும். நமது மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருப்பதால், ஐ.ஓ.டி. 3டி பிரிண்டிங் போன்ற பல நுண்ணிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பணியாளர் திறன்களை மேம்படுத்தல், உலக விநியோகச் சங்கிலிகளுக்கான மதிப்புக்கூட்டல் போன்ற பல நுட்பமான, சிறப்பான பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

திறன்மிகு மையம்

இப்போது கூட, ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி டிட்கோ உடன், ஒரு திறன்மிகு மையம் அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இதன் மூலம் விமான எந்திரங்களுக்கு தேவைப்படும் மேம்படுத்தப்பட்ட உபகரணங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்படும்.

அனைத்து தொழிற்சாலைகளை உள்ளடக்கிய தரவுத்தளம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் ஏற்றுமதிக்கான பிரத்தியேக ஏற்றுமதிப்பிரிவு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளுடன் தொழில் உறவுகளைப் பலப்படுத்துதல் போன்ற பல முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தொழில்கள் மிகப்பெரிய அளவில் பயனடையும்.

இன்றைய தினம் புதிய தொழில்கள் தொடங்க, 35 நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலமாக ரூ.17,141 கோடி முதலீடு கிடைக்கிறது. 55 ஆயிரத்து 54 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

83 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரூ.4,250 கோடி முதலீடு கிடைத்துள்ளது. 21,630 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 5 நிறுவனங்களின் வணிக உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரூ.7,117 கோடி முதலீடு கிடைக்கும். 6,798 பேருக்கு வேலை கிடைக்கும்.

மொத்தமாக சொல்வதாக இருந்தால் இன்று உறுதி செய்யப்பட்டுள்ள 49 திட்டங்களின் மூலமாக ரூ.28 ஆயிரத்து 508 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 83 ஆயிரத்து 482 பேருக்கு வேலை கிடைக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

எத்தனை மாவட்டங்களில் அமையும்?

மோட்டார் வாகன உதிரிபாகங்கள், தொழில் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், ஜவுளி, மருந்துப்பொருட்கள் ஆகிய பல்வேறு துறைகளில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை என்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், இந்த திட்டங்கள் பரவலாக அமைய உள்ளன.

அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்

அதிகப்படியான முதலீடுகளைத் தாருங்கள். அதன் மூலமாகத் தமிழ்நாட்டு இளைஞர்களின் மனிதவளத்துக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பை உறுதி செய்யுங்கள். இதன் மூலமாக தமிழ்ச்சமூகத்தின் மேன்மைக்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள் என்று இக்கூட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் தொழில் துறையினருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுஎல்லையைத் தாண்டிய தொழில் நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

தொழில் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றத் திட்டமிட்டு உறுதியாகவும், திறனுடனும் செயல்படும் தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர், தொழில்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன். உங்கள் காலம் தமிழ்நாட்டு தொழில்துறையின் பொற்காலமாக விளங்கியது என்ற பெயரைப் பெற்றுத் தருவீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அத்தகைய சூழலை உருவாக்குவதற்கு இந்த அரசு அனைத்து ஏற்பாடுகளையும் திறந்த மனதுடன் செய்துதரத் தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில் துறை முதன்மை செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால், தொழில்துறை சிறப்பு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story