தமிழகத்தில் மாவட்ட வாரியாக இயக்கத்தில் உள்ள செட்டாப் பாக்ஸ்களின் விவரம்


தமிழகத்தில் மாவட்ட வாரியாக இயக்கத்தில் உள்ள செட்டாப் பாக்ஸ்களின் விவரம்
x
தினத்தந்தி 22 July 2021 7:23 PM GMT (Updated: 22 July 2021 7:23 PM GMT)

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இயக்கத்தில் உள்ள செட்டாப் பாக்ஸ்களின் விவரம் குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிர்வாகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார் தலைமையில், மேலாண்மை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் முன்னிலையில் 22-ந்தேதி (நேற்று) சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழக கூட்ட அரங்கில் மாவட்ட துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் வினியோகஸ்தர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்டம் மற்றும் வட்டம் வாரியாக வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ்களின் விவரம், அவற்றில் இயக்கத்தில் உள்ளவை, கடந்த 6 மாதங்களில் புதிதாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் எண்ணிக்கை, அதே காலத்தில் இயக்கத்தில் இல்லாததால் திரும்ப பெற்றவை குறித்த விவரம், செட்டாப் பாக்ஸ்களை இயக்கத்திற்கு கொண்டு வராமல் உள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இலக்கு பற்றிய ஆய்வு

மேலும் டிஜிட்டல் சிக்னல் வினியோகஸ்தர்கள் வாயிலாக வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ் விவரம், கடந்த 2 மாதங்களில் கட்டணம் செலுத்தாமல் உள்ளவை, மறு இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்ட செட்டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை, இயக்கத்தில் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டவை மற்றும் இலக்கு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இவை தவிர, உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு விவரம், அரசு இ-சேவை மற்றும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களின் செயல்பாடு மற்றும் கடந்த 2 மாதங்களில் வழங்கப்பட்ட சேவைகள் விவரம் ஆகியவையும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் பொது மேலாளர் (இயக்கம்) சந்தோஷினி சந்திரா, பொது மேலாளர் (வலையமைப்பு) சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story