2026-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்: சென்னையில் 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வட்ட பாதை


2026-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்: சென்னையில் 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வட்ட பாதை
x
தினத்தந்தி 25 July 2021 1:13 AM GMT (Updated: 25 July 2021 1:13 AM GMT)

சென்னை பெருநகரத்தை ஒரே ரெயிலில் 2½ மணி நேரத்தில் சுற்றிவரும் வகையில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதைகள் 2026-ம் ஆண்டு பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை,

சென்னையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, தற்போது 2-வது கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகளை கடந்த ஆண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த பணிகள் அனைத்தும் ரூ.69 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 128 ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

ரெயில் வட்ட பாதை

முதல் கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 வழிப்பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தற்போது 2-ம் கட்டத்தில் 3, 4 மற்றும் 5-வது வழித்தடம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

இந்த பாதை பயணிகள் பயன்பாட்டுக்கு வரும்போது, ஒரே ரெயிலில் சுமார் 2½ மணி நேரத்தில் சென்னை மாநகரின் வடக்கு மற்றும் தெற்கு புறநகர் பகுதிகள் வழியாக மாநகரத்தை வட்டமிடும் வகையில் ஒரு ரெயில் வட்ட பாதை அமைக்க திட்டமிட்டு உள்ளோம். மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும், கிழக்கில் அடையாறு வழியாகவும், சென்னையின் மேற்கில் கோயம்பேடு வரையிலும் வட்ட பாதை 81 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும்.

இந்த வட்ட பாதை 3 மற்றும் 5-வது வழித்தடத்தை இணைக்கும். சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தை கோயம்பேடு வழியாக விமான நிலையத்துடன் இணைக்கும் வகையில் 1 மற்றும் 2-வது வழித்தடத்துடன் இணைக்கிறது.

118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் 2-ம் கட்டத்திற்கான கட்டுமான பணிகள் வருகிற 2026-ம் ஆண்டுக்குள் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்ட பாதையானது மாதவரத்தில் தொடங்கி கோயம்பேடு, சோழிங்கநல்லூர், அடையாறு வழியாக மீண்டும் மாதவரம் வரும் வகையில் பாதையில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 7 ரெயில்கள் 8.5 நிமிடம் இடைவெளியில் இயக்கப்படும்.

நேரத்தை மிச்சப்படுத்தலாம்

5-வது வழிப்பாதையில் உள்ள பெரும்பாக்கத்தில் இருந்து, 3-வது வழிப்பாதையில் உள்ள பெரம்பூருக்கும், அல்லது 3-வது வழிப்பாதையில் உள்ள தரமணியில் இருந்து 5-வது வழிப்பாதையில் பயணிக்க விரும்பும் பயணிகள் வட்ட பாதையில் இயங்கும் ரெயிலில் ஏறி பயணிக்கலாம். இந்த வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் போரூர் சந்திப்பில் இருந்து பெருங்குடி அல்லது காரப்பாக்கம் போன்ற பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓ.எம்.ஆர்.) உள்ள ரெயில் நிலையங்களுக்கு பயணிகள் ஒரே ரெயிலில் பயணிக்க முடியும். இதன் மூலம் பயணிகள் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

2-வது வழித்தடத்தின் விரிவான திட்ட அறிக்கையில், 3-வது வழித்தடத்தில் உள்ள போக்குவரத்தை முழுமையாக பூர்த்தி செய்வதுடன், மாதவரம் முதல் மாதவரம் பஸ் முனையம் வரை 5 ஆயிரத்து 171 பயணிகளும், மாதவரம் பஸ் முனையம் முதல் 5-வது வழித்தடத்தில் உள்ள சோழிங்கநல்லூர் வரை 35 ஆயிரத்து 714 பயணிகளும் வருவார்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

பெட்டிகள் அதிகரிப்பு

புதிதாக அமைக்கப்படும் 3 வழிப்பாதையிலும் தனித்தனியாகவும் ரெயில்கள் இயக்கப்படும். இதனால் 2055-ம் ஆண்டுக்குள் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் மார்க்கத்தில் 3.5 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படும். இதில் வட்ட பாதையில் இயங்கும் ரெயில்களும் அடங்கும்.

சுமார் 21, மூன்று பெட்டிகள் கொண்ட ரெயில்கள் மற்றும் 2025-ம் ஆண்டில் 15, ஆறு பெட்டிகள் கொண்ட ரெயில்கள் மற்றும் 2055-ம் ஆண்டுக்குள் 37, ஆறு பெட்டிகள் கொண்ட ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story