மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் அமெரிக்க தூதரகம் முன்பு 29-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் அமெரிக்க தூதரகம் முன்பு 29-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 July 2021 3:10 AM GMT (Updated: 27 July 2021 3:10 AM GMT)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் அமெரிக்க தூதரகம் முன்பு 29-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. எனவே, மக்கள் விரோத, ஜனநாயக விரோத மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட தமிழகத்தின் உரிமையை மீட்கவும், தமிழக மக்களின் நலன் காக்க தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்தும், அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டியும், சுயேச்சையாகவும் போராட திட்டமிட்டுள்ளோம்.

அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழலும், முறைகேடுகளும் நடைபெற்றுள்ளன. எனவே அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல், முறைகேடுகள் குறித்து தற்போதைய தமிழக அரசு முழு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கியூபா அரசு மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை விலக்க மறுக்கும் அமெரிக்க அரசை கண்டித்தும், கியூபா அரசுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, வி.சி.க., சி.பி.ஐ. (எம்.எல்) ஆகிய கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story